கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலெர்ட்! - நிதி உதவி அறிவித்த மாநிலங்கள் | States released fund to help kerala over floods

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (18/08/2018)

கடைசி தொடர்பு:20:00 (18/08/2018)

கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலெர்ட்! - நிதி உதவி அறிவித்த மாநிலங்கள்

கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் கேரளாவுக்கு நிதி உதவி அறிவித்திருக்கின்றன. 

கேரளா வெள்ளம்


கேரளாவில், கடந்த 9-ம் தேதி முதல் பெய்துவரும் கன மழையால், அம்மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிவழிகின்றன. அணைகளுக்கு வரும் நீர், அப்படியே ஆறுகளில் திறந்துவிடப்படுவதால், அம்மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் வெள்ளத்தால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கனமழையால், கேரளாவில் உள்ள சுமார் 80 அணைகள் நிரம்பி இருப்பதாகவும், மழை வெள்ளப் பாதிப்புகளால் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார். கன மழை சேதங்களை மறுசீரமைப்பு செய்வது கடினமான காரியம் என்று கூறியிருக்கும் அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். 

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவுக்கு, நாடு முழுவதிலுமிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. தனிநபர்கள், அமைப்புகளைத் தாண்டி, மாநில அரசுகளும் நிதி உதவி அறிவித்துவருகின்றன. தமிழக அரசு சார்பில் ஏற்கெனெவே ரூ.5 கோடி அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 5 கோடி ரூபாய் கேரளாவுக்கு வழங்க இருக்கிறது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் கேரளாவுக்கு நிவாரணப் பொருள்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டுவருகின்றன. தமிழக சுகாதாரத் துறையின் சார்பில், மருத்துவக் குழுக்களும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 
இந்த நிலையில், கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும் நிதி உதவி அறிவித்துவருகின்றன. தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ரூ.25 கோடியும், மகாராஷ்டிரா - ரூ.20 கோடி, குஜராத் - ரூ.10 கோடி, பீகார் - ரூ.10 கோடி, மத்தியப்பிரதேசம் - ரூ.10 கோடி, உத்தரப்பிரதேசம் - ரூ.15 கோடி நிவாரண நிதி அறிவித்திருக்கின்றன.