வெளியிடப்பட்ட நேரம்: 22:25 (18/08/2018)

கடைசி தொடர்பு:22:32 (18/08/2018)

கடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை! - மத்திய அரசு அறிவிப்பு

கொச்சியில் உள்ள கடற்படை விமான ஓடுதளத்தைப் பயன்படுத்தி, பயணிகள் விமான சேவையை வரும் திங்கள்கிழமை தொடங்க இருப்பதாக,  மத்திய அரசு அறிவித்துள்ளது.

கேரளா மழை


தென்மேற்குப்  பருவமழையின் தீவிரத்தால் கேரளா நிலைகுலைந்து போயுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக, பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்துவருகின்றனர். கேரளாவில் ஏற்பட்டுள்ள  வெள்ளப் பாதிப்புக்கு, இதுவரை 357 பேர் பலியாகியுள்ளதாக கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அம்மாநிலத்தின் அரசு எந்திரம் முழு வீச்சில் முடக்கிவிடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள், செல்ஃபோன் டவர்கள் சாய்ந்துள்ளதால், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்வதில் சிரமம்  ஏற்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய விமான நிலையங்களுள் ஒன்றாகக் கருதப்படும் கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால், விமான சேவைகள் வரும் 26-ம் தேதி வரை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொச்சியில் உள்ள கடற்படை விமான ஓடுதளத்தை பயணிகள் விமான சேவைக்குப் பயன்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. கடற்படை விமான ஓடுதளத்தைப் பயன்படுத்தி, கொச்சிக்கு வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 20-ம் தேதி) முதல் பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதனிடையே, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு எஸ்.எம்.எஸ், செல்போன் இணையதளச் சேவையை இலவசமாக வழங்க தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் முன்வந்துள்ளன.