வெளியிடப்பட்ட நேரம்: 09:46 (19/08/2018)

கடைசி தொடர்பு:10:02 (19/08/2018)

`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்!

கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

கேரளா

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிவிட்டது. வரலாறு காணாத மழையால் பாலக்காடு, எர்ணாகுளம் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும், இடுக்கி மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிகுந்த தேசம் ஏற்பட்டுள்ளது, அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்ளச் சிரமமாக உள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். தற்போது, அங்கு மழையின் அளவு குறைந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையில், எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் உள்ள முகாமில் ஒரு தம்பதியினர் செய்துவரும் சேவைக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து வருகின்றனர் ஆலுவா பகுதி மக்கள். 

Photo Credit -@Mathrubhmi

இடைவிடாது கொட்டித் தீர்க்கும் மழை, வெள்ளம், நிலச்சரிவு... அதனால் ஏற்பட்ட தேசம் என ஆலுவா மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள யு.சி. கல்லூரியிலும், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, வேண்டிய மருத்துவ உதவிகளைக் கடந்த மூன்று நாள்களாக செய்து வருகின்றனர் மருத்துவர் நஜீப் மற்றும் அவரது மனைவி நசீமா. நஜீப்பின் மனைவியும் மருத்துவரே. கடந்த சில நாள்களில் மூன்று மணி நேரம் மட்டும்தான் இவர்களது உறக்கம். 

மழை மற்றும் வெள்ளத்தால் நோய்த்தொற்று பாதிப்பில் தவித்த அப்பகுதி மக்களுக்கு இடைவிடாது முதலுதவி அளித்துவருகின்றனர். மருத்துவ துறையின் மகத்தான சேவையை இருவரும் செய்துவருவது சல்யூட் போட வைத்திருக்கிறது.