திருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை தனித்து விடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்களுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த பாதுகாப்புகளையும் மீறி அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. அப்படி சமீபத்தில் நடந்தது தான் திருப்பதி வந்திருந்த பக்தரின் குழந்தை கடத்தப்பட்டது. பின்னர் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அந்தக் குழந்தை மீட்கப்பட்டது. தற்போதும் அதே போல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று திருப்பதியில் உள்ள தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தில் குடைக்கு கீழ் ஒரு குழந்தை அழுகின்ற சத்தம் கேட்டுள்ளது. சத்ததை கேட்டுச் சென்று பார்த்த அருகிலிருந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை யாரோ விட்டுச் சென்றது தெரியவந்தது. யாரும் இல்லாத நிலையில் பசியால் அந்தக் குழந்தை வெகுநேரமாக அழுதுள்ளது. உடனடியாக குழந்தையை மீட்டவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த குழந்தைகள் நலக் காப்பக அதிகாரிகள் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். முதல்கட்ட விசாரணையில் மூதாட்டி ஒருவர் குழந்தையை விட்டுச் சென்றதாக அருகிலிருந்தவர்கள் கூறியுள்ளனர். எனினும் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!