உலக அமைதி... மனித உரிமை உலகின் உரிமைக்குரல் கோஃபி அன்னான்! #RIPKofiAnnan | 7th UN General Secretary Kofi Annan passed away.

வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (19/08/2018)

கடைசி தொடர்பு:12:27 (19/08/2018)

உலக அமைதி... மனித உரிமை உலகின் உரிமைக்குரல் கோஃபி அன்னான்! #RIPKofiAnnan

கானாவில் பிறந்த இவர், ஆப்பிரிக்காவின் வளர்ச்சி குறித்து அக்கறைகொண்டிருந்தார். ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார்.

உலக அமைதி... மனித உரிமை உலகின் உரிமைக்குரல் கோஃபி அன்னான்! #RIPKofiAnnan

லக அமைதி, நீடித்த வளர்ச்சி, மனித உரிமை ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்த கோஃபி அன்னான் உடல்நலக் குறைவால் தன்னுடைய 80-வது வயதில் உயிரிழந்தார். 

கானா நாட்டில் உள்ள குமாசியில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி பிறந்தார் கோஃபி அன்னான். இவரும் இவரின் சகோதரியும் இரட்டையர்களாகப் பிறந்தவர்கள். கானா நாட்டின் கலாசாரப்படி இரட்டையர்களாகப் பிறக்கின்றவர்கள் கௌரவமாகக் கருதப்படுவர். 1957-ல் தனது பள்ளிப்படிப்பை முடித்த தருணத்தில், கானா நாட்டிற்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலைக் கிடைத்தது. 1958-ம் ஆண்டு இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளை எளிதாக கற்றுக் கொண்டார். 

கல்லூரி படிப்பிற்குப்பின், 1962-ம் ஆண்டு ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்புடன் சேர்ந்து நிதிநிலை அதிகாரியாகத் தனது முதல் பணியைத் துவங்கினார். அதன்பின், 1974 முதல் 1976 வரை கானா நாட்டில் சுற்றுலாத்துறையில் இயக்குநராகப் பணியாற்றினார். இதையடுத்து, ஐ.நா.வில் உதவி பொது செயலாளராக மூன்று பதவிகளில் நியமிக்கப்பட்டார். 1987 முதல் 1990 வரை மனித வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகவும், 1990 முதல் 1992 வரை திட்டம் திட்டமிடல், பட்ஜெட் மற்றும் நிதி கட்டுப்பாட்டாளராகவும், 1993-ல்  அமைதிசெயல்பாடுகளிலும் பணியாற்றினார். 1994-ல் ருவாண்டா படுகொலைகள் நடைபெற்ற காலத்தில், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்குத் தலைமை தாங்கினார். 1996-ல் முன்னாள் ஒருங்கிணைந்த யூகோஸ்லாவியா-விற்கு ஐ.நா பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

கோஃபி அன்னான்

1996-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் முன்னாள் பொது செயலாளர், டாக்டர் பூட்ரோஸ் காளிக்குப் பதிலாக கோஃபி அன்னான் பரிந்துரை செய்யப்பட்டார். அதன்பின்னர், ஜெனரல் சபையில் வாக்கெடுப்பு மூலம் உறுதிசெய்யப்பட்டு, 1997-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஐ.நா-வின் 7-வது பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பினத் தலைவர் கோஃபி அன்னான் ஆவார். 2001-ம் ஆண்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோயை எளிதாக அணுகவும், அதற்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தவும் "தனிப்பட்ட முன்னுரிமை" என்று 5 அம்ச நடவடிக்கைக்கான அழைப்பை வெளியிட்டார். இவரின் சிறந்த உழைப்பிற்கு 2001 டிசம்பர் மாதம் 10-ம் தேதி 'அமைதிக்கான நோபல் பரிசு' கொடுக்கப்பட்டது. இவர் 2006-ம் ஆண்டு ஐ.நா-வின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின், 2012-ல் சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட்டார்.

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகியவுடன், அவரது பெயரில் தொடங்கப்பட்டுள்ள 'கோஃபி அன்னான் அறக்கட்டளை'யின் தலைவராக இருந்து, உலக அமைதிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வந்தார். உலக அமைதி, நீடித்த வளர்ச்சி, மனித உரிமை ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்தார். கானாவில் பிறந்த இவர், ஆப்பிரிக்காவின் வளர்ச்சி குறித்து அக்கறைகொண்டிருந்தார். ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். 80 வயதான கோஃபி அன்னான், உடல்நலக் குறைவால் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் 2018 ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி உயிரிழந்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்