`ரெல்ட் அலர்ட் வாபஸ்.. இடுக்கி அணையில் 2 மதகுகள் மூடல்..' - முழுவீச்சில் கேரளாவில் மீட்பு பணிகள்!

கேரளாவில் விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. 

கேரளா

கேரளாவில், 100 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு வரலாறு காணாத மழை பெய்துள்ளது. அணைகள், ஏரிகள், குளங்கள் என அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இடைவிடாது பெய்த கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளம் ஓயாமல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூடவே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பல மாவட்டங்களில் இன்னும் மக்கள் வெள்ளத்தின் இடையே உயிருக்காகப் போராடி வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி மிகத் தீவிரமாக நடந்து வருகின்றது. 

முன்னதாக, கடந்த 17-ம் தேதி எர்ணாகுளம், இடுக்கி, ஆலப்புழா உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கும் `ரெட் அலர்ட்' என்று சொல்லப்படும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், கேரள மக்கள் கடும் அச்சத்தில் உறைந்தனர். தண்ணீரிலும் கண்ணீரிலும் மக்கள் மிதக்கும் காட்சி காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. இந்த நிலையில், மழையின் அளவு சற்று குறைந்துள்ளதால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 10 மாவட்டங்களுக்கு `ஆரஞ்ச் அலர்ட்' எனப்படும் மிதமான மழை எச்சரிக்கையும் மற்றும் 2 மாவட்டங்களுக்கு `மஞ்சள் அலர்ட்' எனும் மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 

இடுக்கி

இந்நிலையில், இடுக்கி அணையின் நீர்மட்டம் 2,402.28 கன அடியாக உள்ளது. இதனால், அணையின் இரண்டு மதகுகள் மூடப்பட்டுள்ளன. மூன்று மதகுகளிலிருந்து தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் மொத்த கொள்ளவு 2, 403 அடியாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!