வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (19/08/2018)

கடைசி தொடர்பு:13:20 (19/08/2018)

வாஜ்பாய் ஆட்சியில் நடந்த கார் மாற்றம்... விடைபெற்ற அம்பாசிடர்!

வாஜ்பாய் காலத்தில்தான் அம்பாசிடர் கார்கள் மாற்றப்பட்டு நவீன கார்கள் பிரதமருக்கு வழங்கப்பட்டன.

வாஜ்பாய் ஆட்சியில் நடந்த கார் மாற்றம்... விடைபெற்ற அம்பாசிடர்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்தியப் பொருளாதாரத்தில் மேற்கொண்ட சில மாற்றங்கள் முக்கியமானவை. இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை 17-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. 1987-ம் ஆண்டில் இருந்தே ஜி.எஸ்.டி வரிவிதிப்பை இந்தியாவில் அமல்படுத்த முயன்றாலும்,  2000-ம் ஆண்டில் வாஜ்பாய் அமைத்த குழுதான் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறைக்கு இறுதி வடிவம் கொடுத்தது. சர்வ சிக்‌ஷா அபியான் திட்டமும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயக்கல்வி அளிக்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் 984 மில்லியன் செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த 1999-ம் ஆண்டு, பி.எஸ்.என்.எல் நிறுவனம் மட்டும்தான் இயங்கிவந்தது. வாஜ்பாய் அரசு கொண்டுவந்த புதிய தொலைபேசி கொள்கையால்தான் ஏர்டெல், ஏர்செல் போன்ற தனியார் நிறுவனங்கள் தலையெடுக்கத் தொடங்கின. பொருளாதார மாற்றம் மட்டுமல்ல, இந்தியப் பிரதமர்கள் பயன்படுத்தி வந்த கார்கள் மாற்றப்பட்டதுகூட வாஜ்பாய் காலத்தில்தான்!

வாஜ்பாய்

சுதந்திரத்துக்கு முன் கவர்னர் ஜெனரல் பதவிதான், நாட்டில் உயர்ந்தது; குடியரசுத் தலைவர் பதவிக்கு இணையானது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ராஜேந்திர பிரசாத், நவீன வசதிகளுடன் மாற்றியமைக்கப்பட்ட கெடிலாக் காரைப் பயன்படுத்தினார். நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு ரோல்ஸ் ராய்ஸ் ரக காரில் சென்றார். 1980-களில்தான் அம்பாசிடர் கார் பிரபலமாகத் தொடங்கியது. ராஜீவ் காந்தி காலத்தில் அலுவலகப் பணிக்காக அம்பாசிடர் காரும் சொந்தப் பயணத்துக்காக மாருதி எஸ்டீம் காரையும் பயன்படுத்தினார். ராஜீவ் காந்தி, அதிவேகமாகச் செல்லும் கார்களில் பயணிக்கவே அதிகம் விரும்புவார். Range Rover Vogue, Mercedes-Benz 500 SEL ரக கார்களையும் ராஜீவ் காந்தி பயன்படுத்துவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். 

நரசிம்மராவ், ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர் ஆகியோர் அம்பாசிடர் கார்களையே பயன்படுத்திவந்தனர். இவர்களுக்கு அடுத்து ஆட்சியில் அமர்ந்த வாஜ்பாய் காலத்தில்தான் அம்பாசிடர் கார்களுக்குப் பதிலாக நவீன புதிய ரக கார்களை வாங்க முடிவு எடுக்கப்பட்டது. பிரதமராக வாஜ்பாய் மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டாலும் 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை வாஜ்பாய் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தார்.

வாஜ்பாய் ஒருமுறை அம்பாசிடரில் பயணித்தபோது, பிரதமரின் காரே பிரேக் டவுன் ஆகி நின்றுபோனது. பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ந்தனர். 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்குதலும் நடத்தப்பட, நாட்டின் தலைமை அமைச்சரின் பாதுகாப்புகூட கேள்விக்குறியானது. இதைத் தொடர்ந்து  பாதுகாப்பு கருதி பிரதமரின் காரை மாற்ற முடிவுசெய்தனர். நவீன வசதிகொண்ட பி.எம்.டபிள்யூ 7 சீரீஸ் கார் வாங்க முடிவெடுக்கப்பட்டது.  இந்த காரின் அடிப்படை விலை 2.5 கோடி ரூபாய்! பல்வேறு பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதால் கார் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் வரை செலவானது. அப்படி முதன்முதலில் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஐந்து கார்கள் வாங்கப்பட்டன. 

வாஜ்பாய் காலத்தில்தான் பிரதமர்களுக்கு  நவீன கார்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த ரக கார்கள், குண்டுவெடித்தாலும் அசைந்து கொடுக்காது; குண்டு துளைக்காத கண்ணாடிகள், விஷவாயுத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு, தானியங்கித் தீயணைப்பு கருவிகளுடன் அதிநவீன வசதிகள்கொண்டதாக இவை  மாற்றப்பட்டது. டயர் பஞ்சரானாலும் 80 கி.மீ வேகத்தில் இந்த கார் செல்லும். V- 8 ரக பெட்ரோல் இன்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. 6.7 விநாடியில் 100 கிலோமீட்டர் வேகத்தை இந்த காரால் எட்ட முடியும். வாஜ்பாய் காலத்துக்குப் பிறகு மன்மோகன் சிங், மோடி வரை இந்த ரக கார்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். 

பிரதமர் பதவி முடிவுக்கு வந்ததும் வாஜ்பாய் மீண்டும் அம்பாசிடர் காருக்கு மாறிவிட்டார். அப்போது இன்னொரு சுவாரஸ்யமான சம்பவமும் நிகழ்ந்தது. அம்பாசிடர் காரில் வாஜ்பாய் பயணித்தபோது, பின்கதவுகள் இரண்டும் திறக்காமல் மக்கர் செய்தன. பின் இருக்கையில் அமர்ந்திருந்த வாஜ்பாய், சீட்டுகளுக்கு மேலே உள்ள இடைவெளி வழியாக முன் இருக்கைக்கு வந்து முன்கதவு வழியாக வெளியேறினார். 

தற்போதைய பிரதமர் மோடி பி.எம்.டபிள்யூ 7 சீரீஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் ரக கார்களைப் பயன்படுத்தி வருகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்