வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (19/08/2018)

கடைசி தொடர்பு:14:11 (19/08/2018)

கேரளாவுக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி..!

மேற்கு வங்க மாநில அரசு சார்பில் கேரளாவுக்கு 10 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கேரளா வெள்ளம்

தென்மேற்கு பருவமழையால் பெய்த கனமழையின் காரணமாக கேரளாவில், 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை பெய்துள்ளது. கேரளாவிலுள்ள பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்கள் என அனைத்தும் நிரம்பி வழிகின்றன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, கேரள அரசுக்கு பெருமளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, பல்வேறு மாநிலங்களும் நிதி உதவி அளித்துவருகின்றன.

இந்தநிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளாவுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்த மம்தா பானர்ஜி ட்விட்டர் பதிவில், 'கேரளா வெள்ளத்துடன் போராடும் மக்களைப் பற்றி நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணைநிற்கும் இந்தவேளையில், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் நிவாரணத்தொகை வழங்க முடிவெடுத்துள்ளோம். கேராளவில் ஏற்பட்டுள்ள பேரிடரை சமாளிப்பதற்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். கேரள சகோதர சகோதரிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நாங்கள் பிரார்திக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.