வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (19/08/2018)

கடைசி தொடர்பு:15:10 (19/08/2018)

வெள்ள நிவாரண முகாம்களில் மருந்துகள் தட்டுப்பாடு? உதவி எதிர்பார்க்கும் பாதிக்கப்பட்ட மக்கள்

மருந்துகள் பற்றாக்குறையால் வெள்ள நிவாரண முகாம்களில் தவிக்கும் குழந்தைகள், பெண்கள்.!

கேரள வெள்ளத்தால் பல ஆயிரம் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, நாப்கீன்கள் போன்றவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினம் தினம் லாரிகள் மூலமாகக் கொண்டுசெல்லப்படுகின்றன. மாற்று உடை, உணவு போன்றவை தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டுவந்தாலும் போதிய மருந்துப் பொருள்கள் இன்றி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக பெண்கள், குழந்தைகளுக்குக் காய்ச்சல், சளி அதிகமாக உள்ளது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும், சுற்றிலும் மலைப்பகுதிகள் இருப்பதாலும் விசப்பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால், விசமுறிவு மருந்து மற்றும் ஆண்டிபயாடிக் மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுர்வேத மருந்துகள் அதிகம் பயன்படுத்தும் கேரள மக்களுக்கு தற்போது அவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், தமிழக ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் தமிழக அரசு, சளி, காய்ச்சலுக்கான ஆயுர்வேத மருந்துகள் கொடுத்து உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது தொடர்பாக கேரள ஆயுர்வேத மருத்துவர்கள் குழுவினர் வாட்ஸஅப் மற்றும் பேஸ்புக் மூலமாகக் உதவி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.