வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (19/08/2018)

கடைசி தொடர்பு:17:00 (19/08/2018)

`எங்களைக் காக்க சீருடையில் வந்த கடவுள்!' - மீட்புப் பணிகள் குறித்து கேரளாவில் நெகிழ்ச்சி

வெள்ள மீட்புப் பணிகள் குறித்து நெகிழ்ச்சியடைந்த கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவர், சீருடையில் தங்களைக் காக்கவந்த கடவுள் என்று பாராட்டியுள்ளார். 

கேரளாவில் வெள்ள மீட்புப் பணிகள்


கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு கனமழையால் ஏற்பட்டிருக்கிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவருக்கு நாடு முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்களும், நிதி உதவியும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த 9ம் தேதி முதல் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350-ஐத் தாண்டியிருப்பதாகக் கேரள அரசு வேதனை தெரிவித்திருக்கிறது. மேலும், வெள்ள பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்பு ரூ.20,000 கோடிக்கும் அதிகம் என்கிறது மாநில அரசு. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகளின் சார்பில் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்தநிலையில், மழைவெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோட்டயம் நகரவாசி ஒருவர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள என்.சி.சி வீரர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைதளமான ட்விட்டரில் அவர் இட்டுள்ள பதிவில், `எல்லாக் கோயில்களும், மசூதிகளும், தேவாலயங்களும் வெள்ளத்தில் மூழ்கியிருக்க, கடவுள் சீருடை அணிந்து எங்களைக் காக்க வந்தார்’ என்று பதிவிட்டுள்ளார். ராணுவம், தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை, கடற்படை உள்ளிட்டவைகளைச் சேர்ந்த வீரர்களுடன் என்.சி.சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கேரள மாநிலத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்.சி.சியின் கோட்டயம் பிரிவு மற்றும் லட்சத்தீவு பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் கோட்டயம், பத்தினம்திட்டா, திருவல்லா, மூவாற்றுபுழா, இடுக்கி ஆகிய வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த பல நாள்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

பிரிகேடியர் என்.வி.சுனில்குமார் தலைமையிலான அந்தப் பிரிவில் ராணுவ வீரர்கள் 60 பேர், பொதுமக்கள் 40 பேர் மற்றும் 600 என்.சி.சி வீரர்கள் இருக்கின்றனர். இதுகுறித்து பேசிய பிரிகேடியர் என்.வி.சுனில்குமார், `மோசமான வானிலையிலும் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து மக்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவிதமான உபகரணங்களும் இல்லாமல், கிடைக்கூடியவற்றை வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் அவர்களுக்கு, இந்த பாராட்டு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும்’ என்றார்.