வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (19/08/2018)

கடைசி தொடர்பு:16:36 (19/08/2018)

கேரளாவுக்கு 35 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்த கத்தார் மன்னர்..!

கடுமையான மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கையின் கோரதாண்டவத்துக்கு இறையாகியுள்ள கேரளாவுக்கு கத்தார் மன்னர்  அமீர் ஷேக் தமீம் பின் அல்தானி 35 கோடி ரூபாய் நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளார். 

கேரளாவில் கடந்த 8-ம் தேதி மிதமாகத் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, படிப்படியாக அதிகரித்து விஸ்பரூபம் எடுத்தது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது, மதகுகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவால், கட்டடங்கள் மரங்கள் விழுந்துள்ளது. இந்த கடும் வெள்ளத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

மோசமான வானிலை, தரைவழி போக்குவரத்து முடக்கம் போன்ற சவால்களையும் மீறி மீட்பு நடவடிக்கைகளில் ராணுவம், தேசிய பேரிடர் குழுவினர், கடற்படையினர், விமானபடையினர் ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. வெள்ள பாதிப்பிலிருந்து கேரளா மீண்டுவர உதவப் பலநாடுகள் உதவிக்கரம் நீட்டிவருகிறன. கேரள மக்கள் அதிகம் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரகமும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. இந்நிலையில், கத்தார் அரசாங்கமும் கேரளாவுக்கு உதவ முன்வந்துள்ளது. அந்நாட்டு மன்னர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி ரூ.35 கோடி நிதியுதவி அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் கத்தார் இளவரசர் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.