வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (19/08/2018)

கடைசி தொடர்பு:19:40 (19/08/2018)

ஆசிய அளவில் ஊழலில் இந்தியா முதலிடம் - வருந்தும் அமித் ஷா!

`ஊழல்' என்ற இந்த ஒற்றை வார்த்தைதான், இந்திய தேசத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல... இன்னும் பிற வெளிநாடுகளிலும் இந்த வார்த்தைதான் அச்சுறுத்தல் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது; பல்வேறு வழக்குகளினால் அது முற்றுப்பெறாமலும் இருக்கிறது. 

ஊழல்

அரசியல் களம், அரசுத் துறை என ஊழல் எங்கும் வியாபித்து இயங்குகிறது என்பது இன்று நேற்றல்ல... காலந்தொட்டே தொடர்ந்து வரும் உண்மை! ஊழல் ஒருகாலத்திலும் ஒழிந்தபாடில்லை. 

ஊழலை ஒழிக்கச் சட்டங்கள் இருந்து என்ன பயன்? அதை ஒழிப்பதாகச் சட்டம் இயற்றச் சொல்பவர்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் என்பதுதானே வேதனை. இதனால்தான் என்னவோ தெரியவில்லை... கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம், ``இந்தியாவில், அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்குப் பெரிதாக எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை. ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் அனைவருமே மீண்டும் பதவியில் அமர்ந்துவிடுகின்றனர். இது எப்படி நடக்கிறது...?'' என்கிற கேள்வியை, புதிராகவேக் கேட்டிருந்தது. ஆனாலும், அதற்கு இதுவரை விடையில்லை.

'சி.எம்.எஸ் - இந்தியா' என்ற நிறுவனம், ஊழல் நிறைந்த மாநிலங்கள் குறித்து சமீபத்தில் (மே, 2018) ஆய்வொன்றை நடத்தியது. `ஊழல் ஆய்வு - 2018’ என்ற பெயரில் நடைபெற்ற அந்த ஆய்வில், ஊழல் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது தமிழகம். இதற்கு அடுத்த இடங்களில் தெலங்கானாவும் ஆந்திராவும் இருந்தன. 13 மாநிலங்களில் உள்ள  11 அரசு சேவைத் துறைகளில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு குறித்துப் பேசிய 'சி.எம்.எஸ். - இந்தியா' நிறுவனத்தைச் சேர்ந்த அலோக் ஸ்ரீவஸ்தவா,  ``பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பொதுமக்களுக்கான அரசு சேவைகளை வழங்க அதிகளவில் லஞ்சம் பெறும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. தமிழகம், தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஊழலுக்கு எதிராகப் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை'' என்று தெரிவித்திருந்தார். 

அதற்கேற்றபடி, தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்பதைச் சமூக வலைதளங்களும், ஊடகமும் வெளிச்சம் போட்டுக் காட்டிவருகின்றன. இதை, பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷாவும் உறுதிப்படுத்தியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து மாநில நிர்வாகிகளிடம் பேசுவதற்காகக் கடந்த மாதம் சென்னை வந்த அமித் ஷா, ``பி.ஜே.பி எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் ஊழலுக்கு முடிவு கட்டிக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டைப் பற்றி நினைக்கும்போது, என் இதயத்தில் வருத்தம் ஏற்படுகிறது. நாட்டிலேயே அதிகமாக ஊழல் நடைபெறும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. தமிழகத்திலும் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டு வருவதற்கு நாம் உறுதிகொள்ள வேண்டும். அதற்கான பொறுப்பு நமக்கிருக்கிறது. அந்த உறுதியை நாம் ஏற்க வேண்டும்'' என்றார். 

ஊழல்

இந்த நிலையில், சர்வதேச ஊழல் தடுப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் ஓர் ஆய்வை நடத்தியிருக்கிறது. அதில், ஆசியப் பகுதியில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் பலரும், ``பல்வேறு அரசு சேவைகளைப் பெறுவதற்குக் கட்டாயமாக லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது'' என்று தெரிவித்துள்ளனர்.  மேலும், இந்தியாவில் காவல் துறையில்தான் அதிக அளவில் லஞ்சம் புழங்குவதாகவும், அரசுத் துறைகள், தொழிலதிபர்கள், கவுன்சிலர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், வரிவசூல் அலுவலர்களே அதிகமாக ஊழலில் ஈடுபடுவதாகவும் ஆய்வில் கலந்துகொண்ட இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், ஊழலுக்கு எதிராகப் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துவருவதாகவும், சிறப்பாகச் செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ``ஆசிய நாடுகளில் இந்தியா மற்றும் இலங்கையைப் பொறுத்தவரை, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தலைவர்கள் அறிவித்ததால், ஏற்பட்ட எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறவில்லை'' என்று ஊழல் தடுப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் ஜோஸ் உகாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், லஞ்சம் கொடுப்பதற்கும் தண்டனை விதிக்கத்தக்க வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, லஞ்சம் கொடுத்தால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில், லஞ்சம் கொடுக்குமாறு நிர்பந்திக்கப்படுபவர்களைப் பாதுகாக்கும் அம்சமும் இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. எனினும், இந்தச் சட்டத்திருத்தமும் ஊழலை ஒழிக்கும் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களைக் களையவில்லை என்றே சொல்லப்படுகிறது.

இதுகுறித்துப் பேசும் சமூக ஆர்வலர்கள், `` `மனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை' என்பார் அறிஞர் ஒருவர். உண்மைதான். இன்றைய உலகில், தூய்மையாய் இருக்கும் மனிதர்களையும் லஞ்சம் கொடுக்க வைக்கும் நிலைக்குத் தள்ளுவதே ஆட்சியாளர்களின் கடமையாக இருக்கிறது. அதற்கு உதாரணமாய் அவர்கள் இயற்றும் சட்டங்களும் இருக்கின்றன. குறிப்பாக, ஊழல் தடுப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தில் அமைந்திருக்கும் பல விதிகள் ஊழல் அதிகாரிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதற்குத் தடையாக உள்ளன. இந்தத் திருத்தத்தினால், லஞ்சம் வாங்குபவர்களுக்கே  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டுமானால், ஊழல் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, லஞ்சம் கேட்பவர்களும் கொடுக்கிறவர்களும் உடனடியாகத் தண்டிக்கப்பட்டால்தான் பிற அதிகாரிகளுக்கும் அச்சம் ஏற்படும்'' என்றனர், மிகத் தெளிவாக.

கையூட்டை ஒழிப்போம்... தாய்நாட்டைக் காப்போம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்