வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (20/08/2018)

கடைசி தொடர்பு:09:12 (20/08/2018)

`அவரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது' - சித்துவுக்கு சொந்தக் கட்சியிலேயே வலுக்கும் எதிர்ப்பு!

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற விழாவில் பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டு அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டித்தழுவியதற்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சித்து

பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி  நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர், இம்ரான் கானின் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சி 117 இடங்களில் வெற்றி பெற்று, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதிபர் மம்னூன் உசேன், இம்ரான்கானுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் பங்கேற்க இந்தியப் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலானோர் பங்கேற்காத நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டார். அவருக்கு அங்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜவாத் பஜ்வாவும் அவரை வரவேற்றார். 

அப்போது ராணுவ தளபதியை கட்டித்தழுவி சித்து அவருடன் சிறிது நேரம் உரையாற்றிக்கொண்டிருந்தார். பாகிஸ்தான் ராணுவத் தளபதியை சித்து கட்டித்தழுவியதுக்கு எதிராக கண்டனக்குரல்களை எழுப்பிய பா.ஜ.க, ``இந்தியாவில் உள்ள பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களைப் பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றது சித்து நினைவுக்கு வரவில்லையா?" எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து விவாதப் பொருளாக மாறிய இச்சம்பவம் இப்போது வீரியமடைந்துள்ளது. சித்துவுக்கு அவரது சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்புகள் எழுந்துள்ளது. ஆம், பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக உள்ள அமரீந்தர் சிங்கும் இப்போது சித்துவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், தினம், தினமும் நமது ராணுவ வீரர்களைப் பாகிஸ்தான் ராணுவம் கொல்கிறது. அப்படி இருக்கையில் அந்நாட்டு ராணுவத் தளபதியை கட்டித்தழுவிய செயலை ஏற்க முடியாது. சித்துவின் செயலை நான் எதிர்க்கிறேன்" எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க