கேரளாவைத் தொடர்ந்து கோவா... மாதவ் கட்கில் கடும் எச்சரிக்கை! | now Kerala, tomorrow it could be Goa, warns ecologist Madhav Gadgil

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (20/08/2018)

கடைசி தொடர்பு:11:00 (20/08/2018)

கேரளாவைத் தொடர்ந்து கோவா... மாதவ் கட்கில் கடும் எச்சரிக்கை!

கேரளாவைத் தொடர்ந்து கோவா மாநிலமும் அழிவை சந்திக்கலாம் என்று மாதவ் கட்கில் கூறியுள்ளார்.

கேரளாவைத் தொடர்ந்து கோவா மாநிலமும் மழை வெள்ளத்தால் அழிவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் கட்கில் எச்சரித்துள்ளார். 

கேரளா வெள்ளம்

மேற்குத் தொடர்ச்சி மலையை ஆய்வு செய்து கடந்த 2011- ம் ஆண்டு மாதவ் கட்கில் தலைமையிலான நிபுணர் குழு அறிக்கை அளித்தது. கேரளா, தமிழ்நாடு, மகராஷ்டிரா, கோவா, கர்நாடக மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை பரவிக் கிடக்கிறது, 1.40 லட்சம் கி.மீ தொலைவுக்கு பரவி கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை 3 பகுதிகளாகப் பிரித்து பாதுகாக்க மாதவ் கட்கில் குழு அறிக்கை அளித்தது, மேற்குத் தொடர்ச்சி மலையின் 64 சதவிகிதம் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக (ecologically sensitive) அறிவிக்க இந்தக் குழு பரிந்துரைத்தது. 

மேற்குத் தொடர்ச்சி மலையில் சுரங்கம் தோண்டுவது, கல்குவாரி அமைப்பது, மரங்களை வெட்டுவது, ரிசார்ட்ஸ், ஹோட்டல்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது. மக்களின் நலனுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் இயற்கைக்கு முன்னுரிமை கொடுத்துள்ளதாக கேரளாவில் மாதவ் கட்கில் அறிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. கேரள அரசும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட மாதவ் கட்கில் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. 

தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மற்றொரு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மேற்குத் தொடர்ச்சி மலையின் 60 ஆயிரம் கி.மீ பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. இந்த அறிக்கைக்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆக.. மாதவ் கட்கில், கஸ்துரி ரங்கன் குழுக்கள் பரிந்துரை அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டது. இதன் விளைவுதான் தற்போது கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் என்று மாதவ் கட்கில் குற்றம் சாட்டியுள்ளார். மனித தவறுகள் காரணமாகவே  கேரளாவில் இயற்கை சீற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில், மாதவ் கட்கில் அளித்தப் பேட்டியில், `` கேரளாவைப் போல கோவா மாநிலமும் அடுத்து பாதிப்புக்குள்ளாகலாம். இங்கு மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து  சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 35,000 கோடி அளவுக்கு சுரங்க நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான சுரங்கங்கள் அமைத்து பெரு நிறுவனங்கள் கனிம வளங்களை சுரண்டி வருகின்றன. சுரங்கத் தொழில் நிறுவனங்கள் தவறான தகவல்களை அளித்து இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றன. பசுமைத் தீர்ப்பாயம் சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கோவா மாநிலமும் அழிவைச் சந்திக்க நேரிடும்'' என்று அவர் எச்சரித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க