`அந்த இளைஞர் இப்படிச் செய்யலாமா?'- மீட்புப் பணியில் இருக்கும் கடற்படை வீரர் வேதனை | Stranded' man flags down naval helicopter, takes a selfie in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (20/08/2018)

கடைசி தொடர்பு:11:20 (20/08/2018)

`அந்த இளைஞர் இப்படிச் செய்யலாமா?'- மீட்புப் பணியில் இருக்கும் கடற்படை வீரர் வேதனை

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முப்படையினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான கடற்படை ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பிறந்த குழந்தை முதல் 90 வரை உள்ள மூதாட்டிகள் வரை கடற்படை வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்டு வருகின்றனர். முப்படையினரின் மீட்புப்பணி பாராட்டுக்குரிய வகையில் நடந்து வருகிறது. மீனவர்களும் தங்கள் படகுகளைக் கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரும் பங்காற்றி வருகின்றனர். இதற்கிடையே வெட்கக்கேடான ஒரு சம்பவமும் மீட்புப்பணியின்போது நடந்துள்ளது. 

மீட்பு பணியில் கடற்படை வீரர்

கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று மீட்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது வீட்டின் மொட்டை மாடியில் நின்ற இளைஞர் ஒருவர் தனது சட்டையை கழற்றி மீட்பு ஹெலிகாப்டரை நோக்கி சுழற்றியுள்ளார். இதைப் பார்த்த விமானி கஷ்டப்பட்டு வீட்டின் மொட்டை மாடியின் அருகே ஹெலிகாப்டரை இறக்கினார். ஹெலிகாப்டர் அருகே வந்ததும் அந்த இளைஞர் தன் பையில் இருந்த செல்போனை எடுத்து ஹெலிகாப்டருடன் செல்ஃபி எடுத்துள்ளார். இதைப் பார்த்த விமானி அதிர்ச்சியடைந்தார். பின்னர், அந்த இளைஞர் விமானியை நோக்கிச்  செல்லுமாறு கைக்காட்டியுள்ளார். ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டவர்களின் மதிப்பு தெரியாத அந்த இளைஞரை எச்சரித்துவிட்டு விமானி ஹெலிகாப்டரை மீண்டும் மேலே எழுப்பி கிளப்பினார். 

இது குறித்து விமானி கூறுகையில், ``இந்தத் தருணத்தில் நாங்கள் எவ்வளவோ வேகமாகவும் சமயோசிதமாகவும் செயல்பட்டு வருகிறோம். அந்த இளைஞரோ கொஞ்சம்கூட மனிதத்தன்மை இல்லாமல் எங்கள் நேரத்தையும் விமானத்தில் பெட்ரோலையும் விரயம் செய்தார். இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க