வெள்ளத்தில் மிதக்கும் கேரளா... ஜெர்மனிக்குச் சென்ற வனத்துறை அமைச்சரின் பதவி பறிப்பு?

வெள்ளத்தில் கேரளா மூழ்கிக் கிடக்கும் நிலையில் ஜெர்மனிக்குச் சென்ற கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

கேரளா வனத்துறை அமைச்சர் கே. ராஜூ

ஜெர்மனியில் மலையாளிகள் கவுன்சில் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்க ஆகஸ்ட் 16-ம் தேதி கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ சென்றார். அதேவேளையில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆகஸ்ட் 22- ம் தேதி வரை நடைபெறவிருந்த கருத்தரங்கு சுருக்கமாக  முடித்துக்கொள்ளப்பட்டு கருத்தரங்குக்கான செலவுத் தொகை கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டது. ஆனால், கருத்தரங்கில் பங்கேற்க ஜெர்மனிக்குச் சென்ற அமைச்சர் கே.ராஜூ உடனடியாக கேரளா திரும்பவில்லை. அமைச்சரின் செயல் தற்போது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. 

மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை அமைச்சரிடம் உடனடியாக கேரளா திரும்பக் கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அமைச்சரின்  தனிச் செயலர் ஸ்ரீகுமார் கூறுகையில், 'அமைச்சர், நிலைமை இவ்வளவு சீரியஸாக ஆகும் என்று கருதியிருக்க மாட்டார் ' என்று விளக்கம் அளித்துள்ளார். 

``மழை வெள்ளத்தில் சிக்கி மாநிலமே சிதைந்து கிடக்கிறது. இந்தச் சமயத்தில் வனத்துறை அமைச்சர் ஜெர்மனியில் இருப்பது சரியானது அல்ல. இத்தகைய செயலை ஏற்றுக்கொள்ளவே முடியாது. முதலமைச்சர் பினராயி விஜயன்கூட நேற்று மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்தார். முதலமைச்சர் தன் பயணத்தை ரத்து செய்துவிட்டு மீட்புப்பணிகளை முடுக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், வனத்துறை அமைச்சர் கருத்தரங்கு ரத்து செய்யப்பட்ட பின்னரும்கூட ஜெர்மனியில் முகாமிட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளது'' என மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க இரு மாதங்களுக்கு முன்னரே முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அனுமதி வாங்கியிருந்ததாக அமைச்சர் கே.ராஜூ தரப்பில் கூறப்படுகிறது. கொல்லம் மாவட்டம் புனலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பட்டவர் கே.ராஜூ. புனலூர் தொகுதியில் மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!