கண்கலங்கவைத்த ‘தேங்க்ஸ்’ புகைப்படம்!- மீட்பு வீரர்களை நெகிழவைத்த கேரள மக்கள்

கேரளாவில் ஒரு வீட்டு மாடியில் இருந்து இரண்டு பெண்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று அதே மாடியில் கடற்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக `தேங்க்ஸ்' என்று பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

கேரளா

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழை சற்று தணிந்த நிலையில், அணைகளுக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பல அணைகளில் மதகுகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. தற்போது கேரளா முழுவதும் மீட்புப் பணிகள் அதிவேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

தினமும் மீட்புப் பணியின்போது நடைபெறும் ஏதேனும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி வெளியாகி அனைவர் மனதையும் நெகிழவைத்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை கொச்சியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டின் மாடியில் `தேங்க்ஸ்'  என வெள்ளை நிற பெயின்ட் மூலம் எழுதப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி இதே வீட்டின் மாடியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர். இவர்களை கடற்படை பைலட் விஜய் வர்மா மீட்டார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே இவ்வாறு எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

கேரளாவில் மீட்புப் பணியின்போது பல அசாதாரண செயல்களையும் சாத்தியமாக்கிப் பல லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் கடற்படை மற்றும் மீட்புக் குழுவினர். இவர்களுடன் மீனவர்களும் இணைந்து பல துணிச்சலான செயல்களைச் செய்து வருகின்றனர். முன்னதாக நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றி அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு அவருக்குக் குழந்தையும் நலமாகப் பிறந்தது. இதையடுத்து கொச்சியில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த 80 வயது மூதாட்டியை மீட்க மொட்டைமாடியிலேயே ஹெலிகாப்டர் இறக்கப்பட்டது. படகுகளில் ஏற சிரமப்படுபவர்களுக்கு மீட்புப் படையினர் மற்றும் மீனவர்களே படிகளாக உதவிய சம்பவங்களும் தினம்தினம் நிகழ்ந்து வருகின்றன. இதுவரை 7 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மொட்டை மாடியில்  எழுதப்பட்டுள்ள இந்த `தேங்க்ஸ்' புகைப்படம் சமுகவலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, கண்கலங்க வைத்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!