வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (20/08/2018)

கடைசி தொடர்பு:14:02 (20/08/2018)

மூன்றே ஆண்டில் ரூ.2,940 கோடி... `செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில்' தமிழ்நாடு முதலிடம்!

மூன்றே ஆண்டில் ரூ.2,940 கோடி... `செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில்' தமிழ்நாடு முதலிடம்!

பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக `செல்வமகள் சேமிப்புக் கணக்கு' (சுகன்யா சம்ரிதி யோஜனா) என்ற திட்டத்தை, 2015-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் அதிக சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. இதுவரை 15.95 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு, 2,940 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

சேமிப்பு

பத்து வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் செல்வமகள் சேமிப்புத்  திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். இதை, வீட்டுக்கு அருகில் உள்ள அஞ்சல் துறை கிளை அலுவலகத்திலோ அல்லது குறிப்பிட்ட வங்கிக் கிளைகளிலோ தொடங்கலாம். சேமிப்புக் கணக்கைத் தொடங்குவதற்கு, பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் முகவரிச் சான்றிதழ், அடையாளச் சான்றிதழ் போன்றவை அவசியம். கணக்கைத் தொடங்கிய பிறகு ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. 

இந்தச் சேமிப்புக் கணக்கைத் தொடங்க, குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், ஒவ்வோர் ஆண்டும் 250 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். டெபாசிட் தொகையை மாதம்தோறும் குறிப்பிட்ட நாளில் செலுத்தலாம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறையும் செலுத்தவும் வசதியுள்ளது. தற்போது ஆன்லைன் வசதி வழியே பணத்தைச் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

பெற்றோர், அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு சேமிப்புக்கணக்கு தொடங்கலாம். சேமிப்புக்கணக்கு தொடங்கி 15 ஆண்டுக்கு, பணம் செலுத்த வேண்டும். சேமிப்புக்கணக்கைத் தொடங்கிய பெண் குழந்தையின் 21-வது வயதில் முதிர்வுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். 18 வயது நிரம்பியவுடன் உயர்கல்விக்காக 50 சதவிகிதப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 8.1 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதம், ஒவ்வொரு காலாண்டுக்கும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதும், இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கும், அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கும் வருமானவரி விலக்கு சலுகை உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. 

செல்வ மகள்

2015-ம் ஆண்டு `செல்வமகள் சேமிப்புக் கணக்கு'த் திட்டத்தைத் தொடங்கியபோது 1,000 ரூபாய் சேமிக்க வேண்டும் என்று இருந்தது. இதனால், இந்தத் திட்டத்தில் சேர நிறைய பேர் தயங்கினர். பிறகு, குறைந்தபட்சம் 250 ரூபாய் சேமிப்புத்தொகையாகச் செலுத்தினால் போதும் என மாற்றியமைத்தது மத்திய அரசு. இந்த மாற்றத்துக்குப் பிறகு, இந்தத் திட்டத்தில் ஏராளமானவர்கள் சேர்ந்துள்ளனர். இந்தத் திட்டத்தைத் தொடங்கி, மாதமாதம் சேமித்துவருவதன்மூலம் பெண்ணின் திருமணத்துக்கும், உயர்கல்விக்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கும். 21-வது வயதில் கணிசமான தொகை கிடைக்கும். 

பெண்ணின் திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இந்தத் திட்டத்தை முடித்துக்கொண்டு, முதிர்வுதொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம், பெண்ணின் திருமணச் செலவை சொந்த பட்ஜெட்டிலேயே முடிக்கலாம். மாதம் 500 ரூபாய் என்ற அளவில் 14 வருடத்தில் 84,000 ரூபாய் முதலீடு செய்தால், தோராய முதிர்வுத்தொகையாக மூன்று லட்சம் ரூபாய் கிடைக்கும். 

கடந்த ஜூன் மாதத்தின் முடிவில் தமிழகத்திலிருந்து 15.95 லட்சம் பேர் செல்வமகள் சேமிப்புக்கணக்குத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சேமிப்புக்ணக்கில் 2,940 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. தமிழகத்துக்கு அடுத்து, உத்தரப்பிரதேசத்தில் 15.09 லட்சம் சேமிப்புக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 1,288 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர். ரிஸ்க் இல்லாத திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது செல்வமகள் சேமிப்புத் திட்டம்! 


டிரெண்டிங் @ விகடன்