வடிந்த வெள்ளம், ஏ.டி.எம்-களில் குவியும் மக்கள் - இயல்பு நிலைக்குத் திரும்பும் இடுக்கி

இடுக்கி மாவட்டத்தில் வெள்ளம் சற்று வடிந்த நிலையில், அங்கு வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க பொதுமக்கள் குவிந்துவருகின்றனர். 

இடுக்கி

கேரளாவில், கடந்த 10 நாள்களாகப் பெய்துவந்த மழை, தற்போது சற்று தணிந்த நிலையில், அங்கு மெதுவாக இயல்பு வாழ்க்கைத்  திரும்பி வருகிறது. 100 வருடங்களில் இல்லாத மழை மற்றும் வெள்ளம் இந்த ஆண்டு கேரளாவை பெரும் பேரிழப்புக்கு உள்ளாக்கியது. இதில் 350-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நேற்று முதல் மழை சற்று தணிந்த நிலையில், அங்குள்ள பெரும்பாலான அணைகளின் மதகுகள் மூடப்பட்டுவருகின்றன. தற்போது, மீட்புப்பணிகள் மட்டும் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. 

இந்த நிலையில், கேரள வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமான இடுக்கி, தற்போது மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அங்குள்ள சில சாலைகளில் வெள்ளம் சற்று வடிந்த நிலையில், அங்கு வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்கள் அந்தச் சாலையில் பயணிக்கின்றன. மற்றொரு புறம் ஏ.டி.எம் மையங்கள் இன்று திறக்கப்பட்ட நிலையில், பணம் எடுப்பதற்காக அங்கு மக்கள்  குவிகின்றனர்.

மேலும், தொலைபேசி தொடர்புகளைச் சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் அடுத்தகட்டப் பணிகளில் இறங்கியுள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் முழுமையாக வெள்ளம் வடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!