வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (20/08/2018)

கடைசி தொடர்பு:17:00 (20/08/2018)

`பணம் எதுக்கு; இலவசமாக எடுத்துக்கங்க!'- மக்களுக்காக மொத்த துணிகளையும் கொடுத்த கேரள இளைஞர்

கேரள நிவாரண நிதியாகத் தன் கடையில் உள்ள மொத்த துணிகளையும் வழங்கியுள்ளார் ஒரு இளைஞர். இந்தச் செய்தி, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

கேரளா

கேரளாவில் மழை சற்று தணிந்த நிலையில், அங்கு மீட்புப் பணிகள் அதிதீவிரமாக நடைபெற்றுவருகின்றன. படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் தொடர்ந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். கடற்படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கேரள மீனவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்

மீட்புப்பணிகள் ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் நிவாரணப் பொருள்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதை விநியோகிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பணமாக இல்லாமல் அரிசி, மருந்துப் பொருள்கள், உணவு, உடை போன்ற அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கேரளாவின் வயநாட்டில் உள்ள கால்பேட்டா என்ற பகுதியில், கால்பேட்டா டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையை நடத்தி வருபவர் ஃபைசல். இவரிடம் சில தன்னார்வலர்கள் சென்று நிவாரண உதவிக்காக சில துணிகளை விலைக்குக் கேட்டுள்ளனர். உடனே ஃபைசல், ஒரு சில துணிகள் எதற்கு. கடையில் உள்ள அனைத்துத் துணிகளையும் இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு நெகிழ்ந்த தன்னார்வலர்கள், அந்த இளைஞருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தச் செய்தி, கேரள தினசரி பத்திரிகைகளில் வெளியாகி அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தப் பத்திரிகையின் துண்டுச்செய்தி, தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகிவருகிறது.