பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு!

பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்தது தொடர்பாக, நவ்ஜோத் சிங் சித்து மீது முசாபர்ஃபூர் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

தேசத்துரோக வழக்கு

பாகிஸ்தானில், கடந்த ஜூலை 25-ம் தேதி  நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சி 117 இடங்களில் வெற்றிபெற்று, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. சமீபத்தில்,  இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதிபர் மம்னூன் உசேன், இம்ரான்கானுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில்,  முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜவேத் பஜ்வாவும் அவரை வரவேற்றார். அப்போது, சித்துவை கட்டித்தழுவிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி,  அவருடன் சிறிது நேரம் உரையாற்றிக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் ராணுவத் தளபதியை சித்து கட்டித்தழுவியதுக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், நவ்ஜோத் சிங் சித்து மீது பீகார் முசாபர்ஃபூர் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தன்மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த சித்து, `ஒருவர் (பஜ்வா) என்னிடம் வந்து நாம் ஒரே கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள், குருநானக் தேவின் 550  -வது பிறந்தநாளன்று கர்டார்பூர் எல்லை திறக்கப்படும் எனக் கூறும்போது என்னால் என்ன செய்ய முடியும்' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதேபோல, பஞ்சாப் மாநில முதல்வர், `அமரீந்தர் சிங் `தினம் தினம் நமது ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் கொல்கிறது. அப்படி இருக்கையில், அந்நாட்டு ராணுவத் தளபதியை கட்டித்தழுவிய செயலை ஏற்க முடியாது. சித்துவின் செயலை நான் எதிர்க்கிறேன்" எனக் கண்டனம் தெரிவித்தது  குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!