வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (20/08/2018)

கடைசி தொடர்பு:20:19 (20/08/2018)

`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு!

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை `அதி தீவிர பேரிடர்' என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பேரிடர்

`கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில் கடந்த சிலநாள்களாகப் பெய்த மழை, அம்மாநிலத்தையே புரட்டிப்போட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால், 360-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அரசியல்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு ஊழியர்கள், அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகள் என அனைவரும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. மத்திய அரசு சார்பில் முதற்கட்டமாகக் கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளம் பாதித்த கேரளாவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை `அதி தீவிர இயற்கை பேரிடராக' மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,`கேரள மழை வெள்ள பாதிப்புகள் `அதி தீவிர இயற்கை பேரிடராக' அறிவிக்கப்படுகிறது. கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிய பேரிடர் இது என்று தீர்மானிக்கப்படுகிறது. கேரள அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6