தொடர்ந்து உயரும் தொலை தொடர்புத்துறை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை - ட்ராய் | Telecom subscribers base up marginally at 116.8 crore in June

வெளியிடப்பட்ட நேரம்: 03:45 (21/08/2018)

கடைசி தொடர்பு:07:11 (21/08/2018)

தொடர்ந்து உயரும் தொலை தொடர்புத்துறை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை - ட்ராய்

ட்ராய்

தொலை தொடர்புத்துறை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 1.33 சதவிகிதம் உயர்ந்து 115.35 கோடியிலிருந்து 116.80 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளதாக தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் டிராய் தெரிவித்துள்ளது. இதில் மொபைல்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 114.65 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில்  மட்டும் 1.55 கோடி  பேர் புதிதாக  இணைந்துள்ளனர். இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் 97 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துக்கொண்டுள்ளது.  இதற்கு அடுத்தபடியாக ஐடியா நிறுவனம் புதிதாக 63  லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது. 

வோடஃபோன் நிறுவனம் 2.75 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் நிறுவனம்10,689  வாடிக்கையாளர்களையும்  புதிதாக சேர்த்துள்ளன.  அதேசமயம், டாடா டெலி சர்வீசஸ் 10 லட்சம் வாடிக்கையாளர்களையும், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ்  1.08 லட்சம் வாடிக்கையாளர்களையும், எம்.டி.என்.எல் 9,615 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது. 

லேண்ட் லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. லேண்ட் லைன் வாடிக்கையாளர்களின்  எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 2.25 கோடியாக இருந்தது. இது கடந்த ஜூன் மாதத்தில் 2.24 கோடியாக சரிவடைந்துள்ளது. பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 43.2 கோடியிலிருந்து 44.71 கோடியாக அதிகரித்துள்ளது. 

தொலை தொடர்பு துறை சந்தையில் ஐந்து முன்னணி நிறுவனங்கள் 97.67 சதவிகித சந்தை பங்களிப்பை கொண்டுள்ளன என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது.