வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/08/2018)

கடைசி தொடர்பு:07:27 (21/08/2018)

கொச்சி கடற்படை தளத்திலிருந்து விமானங்களை இயக்க இண்டிகோ நிறுவனம் முடிவு

இண்டிகோ

கேரள மாநிலம் தொடர் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் அனைத்து விமானச்சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விமான ஓடு பாதையில் தண்ணீர் வடியாத காரணத்தால் கொச்சி விமான நிலையம் வரும் 26-ம் தேதி வரையில் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இண்டிகோ நிறுவனம் இன்றிலிருந்து கொச்சி கடற்படை விமான தளத்திலிருந்து விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட கேரளாவை வான் வழி மூலம் இணைக்க இந்த முடிவை எடுத்துள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் ஏற்கெனவே கொச்சி  கடற்படை விமானத்தளத்திலிருந்து விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவ கோழிக்கோடு, பெங்களூரு, கோவை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு இடையில் விமானங்களை இயக்கவும் முடிவு செய்துள்ளது. இதேபோன்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும்  கொச்சி கடற்படை தளத்திலிருந்து விமானங்களை இயக்க தி்ட்டமிட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.