வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (21/08/2018)

கடைசி தொடர்பு:10:20 (21/08/2018)

வீடுகளில் தேங்கிய 60 செ.மீ மணல் - தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள கேரள மக்கள்

கேரளாவில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களில் இருந்து தங்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டைத் தூய்மை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

கேரளா

PhotoCredits : Twitter/@tittoantony

கேரளாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் கடந்த 10 நாள்களில் மட்டும் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை சற்று தணிந்துள்ளது. தற்போது அங்கு இறுதிக்கட்ட மீட்புப் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வெள்ள நீர் சற்று தணிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முயன்று வருகின்றனர். ஆங்காங்கே போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 

PhotoCredits : Twitter/@piyushKAVIRAJ

திருவனந்தபுரம் ஆலப்புழா போன்ற இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளதால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் வீடுகளைத் தூய்மை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் தற்போது 60 செ.மீ அளவு மண் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வீடுகளைத் தூய்மை செய்வதற்கு முன் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமலும் வீணாகித் தூக்கி வீசப்பட்ட பொருள்களில் கொசு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பல்வேறு தொற்று நோய்களைத் தடுக்க முடியும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளம் வடிந்த அனைத்து வீடுகளைச் சுற்றியும் அரசு சார்பில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொலைபேசி சேவைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.