வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (21/08/2018)

கடைசி தொடர்பு:10:45 (21/08/2018)

வெள்ளத்தில் மூழ்கிய குடகு - 12 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் அறிவிப்பு

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

குடகு

கேரளாவைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு அசாதாரண நிலை தொடர்கிறது. பல கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கடலோர காவல்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கர்நாடக முதல்வர் குமாரசாமி வெள்ளம் பாதித்த இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

இதையடுத்து, குடகில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், `` குடகு மாவட்டத்தில் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 845 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் 773 வீடுகள் பாதி அளவு சேதமடைந்துள்ளன. 123 கிமீ அளவுக்குச் சாலைகளும் 58 பாலங்களும் 278 அரசு கட்டடங்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், 3,800 மின் கம்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று காலை 10 மணி வரை சுமார் 4,320 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிகவும் திறமை வாய்ந்த கடலோர காவல்படை, விமானப்படை , தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து தொடர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 5,800 மக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா 3,800 ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 50,000 மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களான பால், மளிகை போன்றவை வழங்கப்படும். குடகு மாவட்டத்தில் அடுத்த 20 நாள்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தொடங்கிய பிறகு சிறப்பு வகுப்புகள் மூலம் முடிக்கப்படாத பாடங்கள் முடிக்கப்படும். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதுப் பள்ளிச் சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” எனப் பதிவிட்டுள்ளார்.