வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (21/08/2018)

கடைசி தொடர்பு:12:04 (22/08/2018)

‘உயிரைக் காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம் சார்’ - முதல்வரை நெகிழச்செய்த கேரள மீனவர்கள்

கேரளாவில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்குத் தினமும் 3,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வரின் அறிவிப்பை மீனவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். 

கேரளா மீனவர்கள்

PhotoCredits : Twitter/@NeonHelium

கேரளாவில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாகப் பெய்த கனமழையினால் அனைத்துப் பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. அங்கு நேற்று முதல் மழை சற்று தணிந்த நிலையில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த 10 நாள்களாகத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோர காவல் படையினருடன் இணைந்து கேரள மீனவர்களும் தங்களின் சொந்தப் படகுகள் மூலம் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி கேரளாவின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்களை மீட்பு முகாம்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது மீனவர்கள் கேரளாவின் ஹீரோக்களாக மாறியுள்ளனர். அவர்களின் மீட்புப்பணிகள் குறித்து பல்வேறு தரப்பினரும் சமூகவலைதளங்களில் பெருமையாகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்குத் தினமும் ரூ.3,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படகுகளைச் சரிசெய்யும் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். இது கேரள மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனிடையே தற்போது எங்கள் சகோதரர்களை மீட்கப் பணம் வேண்டாம் என மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொச்சி துறைமுகத்தில் இருந்து கியாஸ் முகமது என்ற மீனவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ``கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது எனக்கும் என் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் எங்களை ‘மாநிலத்தின் ஆர்மி’ எனக் கூறுவது எல்லையில்லாத சந்தோஷத்தைத் தருகிறது.  நாங்கள் செய்யும் இந்தச் செயலுக்கு அரசு சார்பில் தினமும் 3,000 ரூபாய் வழங்கப்படும் எனக் கூறியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நாங்கள் பணத்துக்காக இதைச் செய்யவில்லை சார். எங்களின் சகோதர சகோதரிகளைக் காப்பாற்ற பணம் வேண்டாம் சார். உயிரைக் காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம் சார்” என வருத்தமாகப் பேசியுள்ளார். மீனவரின் இந்த நெகிழவைக்கும் பேச்சு சமூகவலைதளங்களில் அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளது. தற்போது முன்பைவிட கேரள மீனவர்களுக்கு அதிக பாராட்டுகள் குவிந்து வருகிறது.