வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (21/08/2018)

கடைசி தொடர்பு:12:35 (21/08/2018)

வெள்ளத்தில் மூழ்கிய தாய் மண்... கேரள மக்களுக்காக ரூ.50 கோடியை வாரிவழங்கிய அபுதாபி பில்லினியர்

கனமழையால் உருக்குலைந்துள்ள கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 50 கோடி கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர். கேரள நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் தனி பங்களிப்பு இவருடையதுதான்.

ஷம்சீர்
 

அபுதாபியில் இயங்கிவரும் பிரபல வி.பி.எஸ் ஹெல்த் கேர் என்னும் பெரு நிறுவனத்தின் சேர்மன் ஷம்சீர் வயாலில் (Shamsheer Vayalil). கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட இவர், அபுதாபியில் பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவரின் சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலர். தன் தாய்மண்ணில் மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உடைமைகளை இழந்து தவிப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஷம்சீர், நிவாரண நிதியாக ரூபாய் 50 கோடி கொடுத்துள்ளார். நிவாரண நிதி கொடுத்தது மட்டுமன்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுக்கத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார். கேரள மக்களின் தற்போதைய தேவை வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் கல்வி தான். இவை மூன்றையும் அவர்களுக்கு மீட்டுத் தர என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்று ஷம்சீர் தெரிவித்துள்ளார். 

ஷம்சீர்
 

ஷம்சீர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், `கேரளாவுக்கு இது மிகவும் கடினமான தருணம். கடந்த ஒரு மாதமாகவே மழையில் தத்தளித்து வருகிறது. கேரள மக்கள் அனைவரும் தங்கள் உடைமைகள் அனைத்தும் இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. ஓணம், பக்ரீத் என கேரள மக்களுக்கு எந்தக் கொண்டாட்டமும் இந்தாண்டு இல்லை. துவண்டு போயுள்ள அவர்களை கைகொடுத்து தூக்குவது நம் அனைவரின் கடமை. 

துயரத்தில் ஆழ்ந்துள்ள கேரளாவுக்காக 50 கோடி ரூபாய் வழங்க உள்ளேன். ரூ.50 கோடி மக்களின் அடிப்படைத் தேவைகளான வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்காகச் செலவழிக்கப்படும். மக்களுக்கு நிவாரண நிதி சரியாக சென்று சேருவதை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளேன். அவர்கள் என் செயற்திட்டத்தைச் செயல்படுத்துவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க