வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (21/08/2018)

கடைசி தொடர்பு:13:20 (21/08/2018)

மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவுக்குத் தடை- உச்சநீதிமன்றம் அதிரடி

மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

நோட்டா

கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் நோட்டாவை அறிமுகம் செய்தது. முன்னதாக நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களே கொறடாவின் உத்தரவை மீறி நோட்டாவுக்கு வாக்களிப்பதாகவும் இதனால் தங்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சைலேஷ் மனுமாய் பார்மர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கில் ஒரு வருடமாக விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை மாதம் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய் சந்திரகுட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. 

அதில், இனிவரும் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா முறை கிடையாது என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த அறிக்கையிலும் நோட்டாவை ஒழிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்ததாலும் இதனால் பெரும் குழப்பம் ஏற்படுவதாகக் கூறியிருந்ததாலும் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.