வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (21/08/2018)

கடைசி தொடர்பு:15:15 (21/08/2018)

விபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்

பெங்களூரில் நடைபெற்ற விசித்திர சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த அடியும் படாமல் குழந்தை ஒன்று உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

விபத்து

பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது. பதைபதைக்கவைக்கும் இந்த வீடியோ தொடங்கும்போது இரு சக்கரவாகனத்தில் இருவர் மட்டும் பயணிப்பது தெரிகிறது. அவர்கள் சாலையின் இடது புறமாக வேகமாகச் செல்ல முயலும்போது எதிர்பாராதவிதமாக முன்னால் நின்றிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதுகின்றனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில்  வந்த தம்பதி தூக்கிவீசப்பட்டு சாலையில் உருண்டபடி செல்கின்றனர். ஆனால், அவர்கள் வந்த வண்டி மட்டும் நிற்காமல் செல்கிறது. அதை உற்று நோக்கும்போது அதில் சிறிய குழந்தை ஒன்று தெரிகிறது.  வண்டி மெதுவாகச் சென்று லாரியைக் கடந்து வலது புறத்தில் சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் மோதி நிற்கிறது. வண்டியில் இருந்த குழந்தை புல் தரையின் மீது விழுகிறது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து குழந்தையைத் தூக்குகின்றனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதைப் பெங்களூரு சிட்டி போலீஸ் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, ‘ அதிக வேகம், ஹெல்மெட் இல்லாமல் வந்தது, முந்திச் செல்ல முயன்றது, சொல்போன் பயன்படுத்தியதே விபத்துக்குக் காரணம். நீங்கள் செய்யும் தவற்றுக்கு குழந்தை பொறுப்பாகுமா. நல்லவேளை குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை’ எனப் பதிவிட்டுள்ளனர்.