`எங்களைவிட என் தந்தை ரொம்ப சந்தோஷப்பட்டார்! - ஒரு ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்கிய கேரள மாணவி நெகிழ்ச்சி

கேரளாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தங்களது ஒரு ஏக்கர் நிலத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார், கண்ணூர் மாணவி ஒருவர்.

பிரம்மா - ஸ்வாகா

மழை, வெள்ளப் பாதிப்புகளில் மெதுவாக மீண்டு வரத் தொடங்கியுள்ளது கடவுளின் தேசமான கேரளம். கடந்த இருவார காலமாகப் பெய்து வந்த மழையின் அளவு இரு நாள்களில் குறைந்துள்ளது. எனினும், வரும் சனிக்கிழமை வரை லேசான மழைப்பொழிவு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மழையின் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு கேரள மாணவி ஒருவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். கண்ணூர் மாவட்டம் பையனூரைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் ஸ்வாகா (16) மற்றும் மகன் பிரம்மா (14) இருவரும், அங்குள்ள அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு மற்றும்     9-ம் வகுப்பு படித்துவருகின்றனர். சமீபத்தில், மழை வெள்ள பாதிப்பில் இவர்களது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து மீண்ட இவர்கள், தற்போது வீட்டை சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த ஸ்வாகா மற்றும் அவரது சகோதரர் பிரம்மா, தங்கள் தந்தை தங்கள் பெயரில் எழுதிவைத்த ஒரு ஏக்கர் நிலத்தை வெள்ள நிவாரணத்துக்கு எடுத்துக்கொள்ளும்படி முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இதற்காக, இருவரும் அக்கடிதத்தில் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கூறிய மாணவி ஸ்வாகா, ``எங்கள் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, எனது தந்தை எங்கள் பெயரில் நிலத்தை எழுதிவைத்தார். முதலில் எங்களின் இந்த முடிவுக்கு தந்தை என்ன சொல்லப் போகிறாரோ என்ற பயம் இருந்தது. ஆனால், அவரிடம் இதைக் கூறியபோது எங்களைவிட சந்தோஷமாக இதற்குச் சம்மதம் சொன்னார். இதையடுத்து மழை, வெள்ளப்பாதிப்புக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு நிலத்தை அளித்துள்ளோம். இதை எந்த அளவுக்கு சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை அரசு தீர்மானித்துக்கொள்ளும்" என்றார். 

முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்

இதுகுறித்து கூறிய மாணவர் பிரம்மா, ``நாங்கள் செய்வதைப் பார்த்து மற்றவர்களும் இதேபோல செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உதவிகள் செய்தால்தான், கேரளாவை விரைவாகக் கட்டமைக்க முடியும். இது, இந்த நேரத்தில் மிகத் தேவையான ஒன்றாகும்" என்றார்.

தனது குழந்தைகளின் முயற்சிகுறித்து நெகிழ்ந்து பேசிய சங்கரன், ``எங்களுக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் இந்த மாதிரியான நேரத்தில், எங்கள் மக்களின் வாழ்க்கை எங்களுக்கு மிக முக்கியம். இதனால்தான், எதையும் யோசிக்காமல் நிலத்தை அளிப்பது என முடிவு செய்தோம். நிலத்தின் மதிப்பு ஏறக்குறைய ரூ.50 லட்சம் அளவுக்கு இருக்கும். இதை என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு முடிவு செய்துகொள்ளும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!