`மோடி செய்தது மட்டும் சரியா?’ - விமர்சனங்களுக்கு சித்துவின் பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நவ்ஜோத்சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதில் இருந்தே அவரை சர்ச்சைகள் தொற்றிக்கொண்டன.

சித்து
 

கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் நவஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் சித்துவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சித்துவை கட்டித் தழுவி வரவேற்றார். முதல் வரிசையில் இடம், ராணுவ தளபதியை கட்டிப்பிடித்தது என சித்து சர்ச்சையில் சிக்கினார். இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னரே சித்து மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. 

சித்து
 

சித்து பாகிஸ்தான் ராணுவ தளபதியைக் கட்டித் தழுவியதை காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கண்டித்தார். முசாபர்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் சித்து மீது தேசத்துரோக வழக்கு தொடுத்தார். பாகிஸ்தான் ராணுவத்தினரால் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். சித்துவின் செயல் இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பது போன்று உள்ளது’ என அந்த வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். 

இந்நிலையில் சித்து இன்று தன் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு...

`இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள எனக்கு 10 முறை அழைப்பு வந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய அரசிடம் அனுமதி கேட்டேன். ஆனால், கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் என்னை தொலைபேசியில் அழைத்து பாகிஸ்தான் செல்ல எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பதவியேற்பு விழாவில், முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது பற்றி எனக்குத் தெரியாது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் எனக்கு முதல் வரிசை ஒதுக்கப்பட்டது குறித்து தெரிவித்தனர். அவர்கள் ஒதுக்கிய இருக்கையில்தான் நான் அமர்ந்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது?

மோடி
 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் லாகூருக்குப் பேருந்தில் பயணித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு திடீரென முன் அறிவிப்பின்றி லாகூருக்குச் சென்றார். நான் சென்றதை மட்டும் ஏன் விமர்சிக்கிறார்கள். பிரதமர் மோடி லாகூருக்குச் சென்றபோது அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கட்டித் தழுவினார். மோடியை ஒருவரும் கேள்வி கேட்கவில்லை. விமர்சிக்கவில்லை. ஆனால், என்னை என் தலைவரான பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கே விமர்சித்துள்ளார். 

பாகிஸ்தான் ராணுவ தளபதியை நான் எந்தச் சூழலில் கட்டித் தழுவினேன்  தெரியுமா, அவர் என்னிடம், பாகிஸ்தானில் உள்ள வரலாற்று புகழ்பெற்ற குருத்வாரா கார்த்தார்பூர் சாஹிப்புக்கு இந்திய மக்கள் வருவதற்கு ஏதுவாக வழித்தடம் உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அப்போது என் அன்பை வெளிப்படுத்துவதற்காக அவரைக் கட்டியணைத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது” என்று சித்து சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!