வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (21/08/2018)

கடைசி தொடர்பு:18:03 (21/08/2018)

மீண்டும் புதிய உச்சங்கள் தொட்டது சந்தை! 21-08-2018

இந்திய பங்குச் சந்தையில் இன்று, வர்த்தகம் ஒரு உற்சாகமான நிலையில் துவங்கினாலும், முதலீட்டாளர்கள் பல கவுன்டர்களில் லாபங்களை உறுதிசெய்துகொள்ள விற்பனையில் ஈடுபட்டதால், தொடர்ந்து வலுவான நிலையில் சந்தை செயல்படவில்லை.

இந்திய பங்குக் குறியீடுகள், சென்செக்ஸும் நிஃப்டியும் புதிய உச்சங்களைத் தொட்டு, பின்னர் பாசிட்டிவாகவே முடிந்தாலும், இன்றைய லாபத்தின் அளவு மிகவும் சொற்பமாகவே இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 38,402.96 என்ற புதிய உச்சத்தைத் தொட்டபின், 38,285.75 என்ற நிலையில் 7புள்ளிகள். அதாவது, 0.02 சதவிகித லாபத்துடன் நிறைவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 11,581.75 என்ற புதிய உயரத்தை அடைந்து, பின்னர் 11,570.90 என்ற இலக்கில் 19.15 புள்ளிகள். அதாவது 0.17 சதவிகித லாபத்துடன் முடிந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்,  அமெரிக்கா - சீனா நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை மூலம்  அந்நாடுகளின் வர்த்தக உறவில் ஒரு பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படும் என்று தான் நினைக்கவில்லை என்று கூறியிருப்பது, ஆசியச் சந்தைகளில் ஒரு இறுக்கமான மனநிலை ஏற்பட காரணமாகி, அதன் விளைவாக சந்தைகள் ஒரு கலப்படமான முடிவை இன்று சந்தித்தன.

மேலும், சீனாவும் ஐரோப்பாவும் தங்களது கரன்சிகளின் மதிப்பை உயர்த்தவோ இறக்கவோ செய்ய கையாளும் யுத்திகளையும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகித உயர்வு முடிவு பற்றியும் விமரிசித்திருப்பதும், முதலீட்டாளர்களைச் சற்று பாதுகாப்பான உணர்வுடன் செயல்படவைத்தது எனலாம். 

டாலருக்கெதிராக இந்திய ரூபாய் மதிப்பு கூடியது ஒரு சாதகமான விஷயமாக அமைந்தது.

பவர் மற்றும் மருத்துவத் துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. ரியல் எஸ்டேட் பங்குகள் பெரும்பாலும் கீழிறங்கின. தகவல் தொழில்நுட்பம், எண்ணெய், கேப்பிட்டல் குட்ஸ், நுகர்வோர் சாதனங்கள், எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோமொபைல் மற்றும் உலோகத் துறை பங்குகள், பெரிதாக ஏற்றமோ அல்லது இறக்கமோ காணவில்லை.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

யு.பி.எல் 4.2%
டெக் மஹிந்திரா 3.1%
கோல் இந்தியா 2.6%
லூப்பின் 2.2%
க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 2.1%
ஆக்ஸிஸ் பேங்க் 1.9%
என்.டி.பி.சி 1.7%
சன் பார்மா 1.7%
ஜீ டெலி 1.7%
விப்ரோ 1.5%
சுவேன் லைஃப் சயின்சஸ் 11.3%
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் 8.8%
KEC இன்டர்நேஷனல் 7.3%
கும்மின்ஸ் இந்தியா 6.7%

விலை சரிந்த பங்குகள் :

டாடா ஸ்டீல் 2.8%
பாரத் பெட்ரோலியம் 1.85%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 1.2%
ஹிந்துஸ்தான் யூனிலீவர் 1.3%
வேதாந்தா 1.2%
மஹிந்திரா & மஹிந்திரா 1.1%
அமரராஜா பாட்டெரிஸ் 3%
இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் 2.9%
டி.எல்.எஃப்  2.9%
இன்று மும்பை பங்குச் சந்தையில் 1338 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1386 பங்குகள் விலை சரிந்தும், 169 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க