மன்டோவை தெரியும்... ஆனால், அவர் காலத்தில் வாழ்ந்த புரட்சி பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்டாய் பற்றி? | Remembering iconic urdu writer ismat chughtai on her 107th birthday

வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (21/08/2018)

கடைசி தொடர்பு:19:57 (21/08/2018)

மன்டோவை தெரியும்... ஆனால், அவர் காலத்தில் வாழ்ந்த புரட்சி பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்டாய் பற்றி?

சமூகத்தின் கொடூரங்களை எடுத்துச் சொல்லும் ஓர் எழுத்தாளருக்கு, சமகாலத்தில் என்றுமே மதிப்பும் அங்கீகாரமும் கிடைத்ததில்லை. அப்படித்தான் இருந்தது, எழுத்தாளர் இஸ்மத் சுக்டாயின் வாழ்வும்.

மன்டோவை தெரியும்... ஆனால், அவர் காலத்தில் வாழ்ந்த புரட்சி பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்டாய் பற்றி?

ரு சிறுமியின் பார்வையிலிருந்து சொல்லப்படும் கதை அது...

பேகம் ஜான் (Begum Jan) திருமணமான நடுத்தர வயது பெண்மணி. ஆனால், அவர் திருமண வாழ்க்கை மிகவும் சோகம் நிறைந்தது. அவர் கணவருக்குச் சமூகத்தில் பெரும் மதிப்பு. காரணம், பாலியல் தொழிலாளியிடம் செல்வதும், இரண்டு மூன்று திருமணங்கள் செய்துகொள்வதும் ஆண்களுக்குச் சர்வசாதாரணமாக இருந்த அந்தக் காலகட்டத்தில், பேகத்தின் கணவர் ஒரு பாலியல் தொழிலாளிடம்கூட சென்றதில்லை. ஆனால், அதன் உண்மையான காரணம் பேகத்துக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. பேகத்தின் கணவர் தன் பாலின ஈர்ப்புகொண்டவர். பேகத்தால் இதனை வெளிப்படையாக எங்கும் கூறமுடியாது. எனவே, தனிமைப்படுத்தப்பட்ட பேகம், வாடத் தொடங்குகிறார். அப்போது, அவரின் தனிமையைப் போக்க வருகிறார், ராப்போ. அவர், பேகம் வீட்டில் வீட்டு வேலை செய்பவர். (அவரின் மகள்தான் கதையைச் சொல்லும் சிறுமி). பேகம் வீட்டில் அம்மாவும் பேகமும், அழகான வேலைப்பாடுகள்கொண்ட திரைக்குப் பின்னால் நிகழும் வித்தியாசமான நடவடிக்கைகள், பேகத்துக்கும் அம்மாவுக்கும் (ராப்போ) இடையிலான ரகசிய உறவுகள் ஆகியவை சிறுமிக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், கதையில் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது.

இஸ்மத்

PC: Upperstall.com

- இந்தக் கதை 1942-ம் ஆண்டு, “லிஹாஃப்’ (Lihaaf) என்ற தலைப்பில் எழுதப்பட்டது. பெண் ஓரினச்சேர்க்கை பற்றி அன்றே எழுதியவர், இஸ்மத் சுக்டாய் (Ismat Chughtai). அவரின் புரட்சியையும் துணிவையும் இன்று நாம் கொண்டாடுகிறோம். ஆனால், இந்த ஒரு கதைக்காக, அவர் மீது லஹோர் (பிரிட்டிஷ் இந்தியா காலம்) நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதன்பிறகு எழுதப்பட்ட எழுத்துகளுக்கும், இவரைப் பற்றின விமர்சனங்களுக்கும்கூட இந்தக் கதையின் தாக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது. இந்த ஒரு கதையினால் ஏற்பட்ட சர்ச்சை, அவரின் பல எழுத்துக்களைக் கொன்று புதைத்தது.

சமூகத்தின் கொடூரங்களை எடுத்துச் சொல்லும் ஓர் எழுத்தாளருக்கு, சமகாலத்தில் என்றுமே மதிப்பும் அங்கீகாரமும் கிடைத்ததில்லை. அப்படித்தான் இருந்தது, உருது இலக்கியத்தின் தொடக்க காலத்தில் பெரும் பங்காற்றிய பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்டாயின் வாழ்வும். இவரின் 107-ம் பிறந்தநாளை, டூடுல் வைத்து கொண்டாடியிருக்கிறது கூகுள்.

உத்தரபிரதேச மாநிலம், படோன் (Badaun) நகரில், 1915 ஆகஸ்ட் 21-ம் தேதி, உயர் நடுத்தர இஸ்லாம் குடும்பத்தில் பிறந்தவர் இஸ்மத் சுக்டாய். ஆறு சகோதரிகள், நான்கு சகோதரர்கள் வரிசையில் ஒன்பதாவதாகப் பிறந்தவர். தன் பால்ய காலத்தை பெரும்பாலும் சகோதரர்களுடனே கழித்திருக்கிறார். அவரின் புரட்சிகரமான எழுத்துகளுக்கும் சிந்தனைகளுக்கும் சகோதரர்களுடன் வளர்ந்ததும் முக்கிய காரணம் என்று உருது இலக்கிய வட்டங்கள் கூறுகின்றன.

இஸ்மத்

PC:youtube.com

15 வயதில் தனக்கு நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்திவிட்டுத் தொடர்ந்து படித்தார். பள்ளிப் படிப்பு முடித்ததும் கலைக் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு படித்தார். பிறகு, ஆசிரியராகப் பணிபுரிய பி.எட் படித்து முடித்தார். முதலில், மத்தியப்பிரதேசத்தில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றியவர், பின்னர் உத்தரபிரதேசத்தின் பரேலி எனும் இடத்தில், சில காலம் பணிபுரித்தார். தன் இலக்கிய வாழ்க்கையை, 1938-ம் ஆண்டு, ஒரு நாடகம் எழுதியதன் மூலம் தொடங்கினார் இஸ்மத்.

1930-களில், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்து, கூட்டங்களுக்குச் சென்றார். பெரும்பாலும், மனித உரிமை பற்றிப் பேசிய இந்தச் சங்கத்தின் தாக்கம்தான், அவரின் பிற்கால எழுத்துகளில் பெரும்பாலும் பிரதிபலித்தது. பெண்ணியம், அந்தக் காலகட்டத்தில் அனுபவித்த அடிமைத்தனம், நடுத்தர வர்க்கத்தின் வலிகள், சாதி ஒழிப்பு போன்ற பல சமூகச் சிக்கல்களை இவரது எழுத்துகள் பேசியது. உருது இலக்கியத்தில் இவர் எழுதிய ‘தேஹ்ரி லகீர்’ (Tehri Lakeer/The Crooked Line/கோணலான கோடு) மிக முக்கியமாகக் கருதப்படுக்கிறது. 

இஸ்மத்

PC: reportersclick.com

’கல்யாண்’, ’ஏ பாத்’, ’சோடேன்’ போன்ற சிறுகதைகளும், இவரின் எழுத்துகளில் முக்கியமானவை. இவரின் சமகால எழுத்தாளர்களாக, சதத் ஹசன் மன்டோ, ராஜேந்திர சிங் பேடி, க்ரிஷன் சந்தர் ஆகியோர் இருந்தனர். இவர்களுக்கு மத்தியில், அன்றைய காலத்தில் பேசப்படாத, பெண் சார்ந்த சமூகப் பிரச்னைகளை எழுதினார் இஸ்மத். இவரைச் சமூகத்தின் கலகக்காரராகவே பலரும் கருதினார்கள். உருது இலக்கியத்திலும் பெண்ணிய இலக்கியத்திலும் தவிர்க்கமுடியாத பெண் எழுத்தாளரான இஸ்மத், 1991 அக்டோபர் 24-ம் தேதி மரணம் அடைந்தார்.

இஸ்மத் மறைந்தவிட்டபோதும், எழுதிய எழுத்துகள் இவர் வாழ்ந்த காலத்தைவிடவும் இன்று அதிகமாகப் பேசப்படுகிறது; விவாதிக்கப்படுகிறது. இனிவரும் தலைமுறைகளும் நிச்சயம் பேசும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்