`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்!’ - மத்திய அரசு அறிவிப்பு | HRD Ministry withdraws decision to conduct NEET twice a year

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/08/2018)

கடைசி தொடர்பு:19:00 (21/08/2018)

`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்!’ - மத்திய அரசு அறிவிப்பு

ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்ற முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. 

நீட்

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த இருப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த ஜூலை 7-ம் தேதி தெரிவித்திருந்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்தும் என்றும், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு, சுகாதாரத்துறை சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதால், மாணவர்களுக்கு சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கணினி வழியாக நடத்தப்படும் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை கவலை தெரிவித்திருக்கிறது. 

இந்தநிலையில், சுகாதாரத்துறையின் பரிந்துரைகளை ஏற்று நீட் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்தும் முடிவை மனிதவள மேம்பாட்டுத் துறை கைவிட்டிருக்கிறது. மேலும், கணினி முறையில் தேர்வு நடத்தப்படாமல், பழைய முறைப்படி பேப்பர், பேனா கொண்ட முறையிலேயே நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் அந்த அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு வரும் நவம்பர் 1-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், நுழைவுச் சீட்டுகளை ஏப்ரல் 15-ம் தேதி முதல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வுகள் 2019-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் 2019-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.