கேரளாவைக் காத்த சூப்பர் ஹீரோஸ்! - வழி நெடுக நின்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மக்கள் | kerala people thank fishermen photo goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (22/08/2018)

கடைசி தொடர்பு:12:07 (22/08/2018)

கேரளாவைக் காத்த சூப்பர் ஹீரோஸ்! - வழி நெடுக நின்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மக்கள்

கேரளாவின் ஆர்மி என்று அனைவராலும் கவுரவிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழி முழுவதும் நின்று கேரள மக்கள் நன்றி சொல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. 

கேரளா

photoCredits : Twitter/ @MohammadKaif

செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சமூகவலைதளங்கள் போன்ற அனைத்திலும் கடந்த சில நாள்களாக கேரள வெள்ளம்தான் ஹாட் டாபிக். கேரளாவைச் சூழ்ந்துள்ள வெள்ளம், மக்களின் மனநிலை, அவரச உதவி எண்கள், நிவாரணம் அளித்த பிரபலங்கள், மீட்புப் பணிகள், வெள்ளத்தின் தற்போதைய நிலை போன்ற அனைத்து அப்டேட்களும் தொடர்ந்து அனல் பறந்துகொண்டிருந்தன. இதையடுத்து கேரளாவுக்காக உதவும் சில நல்ல உள்ளங்களின் நெகிழ்ச்சிக் கதைகளும் தொடர்ந்து உலா வந்துகொண்டிருக்கிறது. இவை மற்ற மாநிலங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளன. ஆனால், கேரள மக்களைப் பொறுத்தவரை மீனவர்கள் பற்றிய செய்திகளே அதிகம் பகிரப்படுகின்றன. 

photoCredits : Twitter/@GiriFuser

ஆம், மழை, வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரள மக்களை மீட்ட பெரும் பங்கு மீனவர்களைச் சேரும். வெள்ள பாதிப்பு எனத் தகவல் தெரிந்தவுடன் தங்களின் சொந்தப் படகுகள் மூலம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் சென்று லட்சக்கணக்கானவர்களை மீட்டுள்ளனர். பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோரக் காவல் படையினர் ஒருபுறம் தீவிரமாக செயல்பட அவர்களுக்குத் தோள் கொடுத்து தங்கள் பங்குக்கு அதிக மக்களை மீட்டது மீனவர்கள்தான்.

photoCredits : Twitter/@nuts2406

கேரள மக்கள் மீனவர்களுக்கு ‘மாநிலத்தின் ஆர்மி’ என்ற பெயர் சூட்டியுள்ளனர். சமூகவலைதளங்களில் பலரும் மீனவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சூப்பர் ஹீரோஸ் போன்று செயல்பட்ட மீனவர்களைப் புகழ்ந்து சில கார்டூன்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

photoCredits : Twitter/@dipin1691

இந்த நிலையில், நேற்று முதல் சமூகவலைதளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு படம். கேரளாவின் செங்கனூர் பகுதியில் தங்களின் மீட்புப்பணிகள் நிறைவடைந்ததும் மீனவர்கள் லாரிகளில் தங்களின் படகுகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். அப்போது மக்கள் வழி நெடுகிழும் நின்று மீனவர்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கின்றனர். இந்தப் புகைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தங்களுக்கு உதவிய மீனவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கும் காட்சி அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.