கேரளாவை மீட்க 2,600 கோடி ரூபாய் தேவை! - மத்திய அரசிடம் பினராயி விஜயன் கோரிக்கை

கேரளாவுக்கு சிறப்பு நிதித் தொகுப்பாக ரூ.2,600 கோடி தேவை என முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். 

கேரள முதல்வர்

இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழை கேராளாவை புரட்டிபோட்டுள்ளது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாகப் பொழிந்த மழை சற்று தணிந்த நிலையில் தற்போது அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 350-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோரக் காவல் படையினர், தன்னார்வலர்கள் எனப் பலரும் மாநிலம் முழுவதும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் தொடர்ந்து கேரளாவுக்கு நிவாரணப் பொருள்கள் வந்துகொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் மாநிலத்தின் சேதம், மறுக்கட்டமைப்பு குறித்து ஆலோசிக்க கேரளாவில் நேற்று அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், `` கேரளாவில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரண நிதிகள் வந்துகொண்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரக நாடு ரூ.700 கோடியை அளிப்பதாக உறுதியளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மாநிலத்தின் வெள்ளச் சேதங்களை பிரதமர் மோடி, இரண்டு மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அதன்பின் முதல் கட்ட நிதியாக ரூ.500 கோடி அறிவித்துள்ளனர். ஆனால், இந்த நிதி போதாது. மாநிலத்தின் கட்டமைப்புகளுக்கு சிறப்பு நிதி தொகுப்பாக ரூ.2,600 கோடி தேவைப்படுகிறது. இதை மத்திய அரசு விரைவில் ஒதுக்க வேண்டும். 

மாநிலம் முழுவதும் 3,200 நிவாரண முகாம்களில் சுமார் 10.78 லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாள்களாக மழையின் அளவு குறைந்த நிலையில் ஆலப்புழா, கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. பல இடங்களில் போக்குவரத்து தொடங்கப்பட்டுவிட்டது. கேரள மக்கள் வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக் கடனை ஒரு ஆண்டுக்குப் பிறகு செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. வீடுகளில் தேங்கியிருக்கும் சேறு மற்றும் கழிவுகளை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. பல இடங்களில் விஷப் பூச்சிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை சேதம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆலோசிக்க வரும் 30-ம் தேதி சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தைக் கூட்ட ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!