‘பெண்ணுக்கு தீ வைத்துக் கொலை செய்ய முயற்சி?’ - முரண்படும் வாக்குமூலம்

பாட்னாவில் பெண் ஒருவரின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொலை செய்ய முயன்றனர். இச்சம்பவத்தில் அந்தப் பெண்ணின் வாக்குமூலமும் கிராமத்தினர் அளித்த தகவலும் முரண்பாடாக உள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலை

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவரின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண் வசித்து வந்த கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்தப் பெண்ணின் பெயர் புனியா தேவி என்பது தெரியவந்துள்ளது. அவருக்கும் அவரின் கணவர் ஷங்கர் மன்ஜிக்கு இடையே சண்டை ஏற்பட்டதாகவும் இதனால் விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். சண்டைக்குப் பிறகு கணவர் வெளியில் சென்றுவிட்டதாகவும் அவர் இல்லாத நேரத்தில் புனியா இவ்வாறு செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரின் உறவினர் ரஞ்சித் சவுத்ரி சென்று அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கிராம மக்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று அந்தப் பெண்ணின் வாக்குமூலம் முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய காவல்துறை உயர் அதிகாரி, ``மருத்துவமனையில் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரின் உறவினரான சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் தன் மீது தீவைத்தாக அந்தப்பெண் கூறியுள்ளார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த நால்வர் மீதும் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்தப் பெண்ணின் வாக்குமூலமும் கிராமத்தினர் அளித்த தகவலும் முரண்பாடாக உள்ளது இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!