வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (22/08/2018)

கடைசி தொடர்பு:11:20 (22/08/2018)

`சட்டம் அனுமதிக்காத இடத்துக்குள் நுழைய முயல்கிறது’ - உச்சநீதிமன்றத்தை எச்சரிக்கும் மத்திய அரசு

குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் எல்லை மீறுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

உச்சநீதிமன்றம்

குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் நிற்கத் தடை விதிப்பது மற்றும் சின்னம் வழங்க மறுப்பது குறித்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் எல்லை மீறுவதாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் (மத்திய வழக்கறிஞர்) கே.கே வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, ``குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டால் வேட்பாளர்கள் மீது பொய்யான வழக்குகளை பதியும் நிலை உருவாகும். இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காத இடத்துக்குள் நுழைய உச்சநீதிமன்றம் முயற்சி செய்கிறது” எனக் கடுமையாகப் பேசினார். 

முன்னதாக இந்த வழக்கில் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களின் அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ரோஹிண்டன் நாரின் ஆகியோர் மத்திய அரசின் கருத்தை ஏற்க மறுத்துள்ளனர். நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காத வரையில் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்குச் சின்னத்தை வழங்க முடியாது எனத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கமுடியும் என நீதிபதி ரோஹிண்டன் கூறினார். இந்த வழக்கு வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.