தமிழிசையிடம் ஒப்படைக்கப்பட்டது வாஜ்பாய் அஸ்தி - 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு! | Atal Bihari Vajpayee's ashes handed over to Presidents of all states

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (22/08/2018)

கடைசி தொடர்பு:12:40 (22/08/2018)

தமிழிசையிடம் ஒப்படைக்கப்பட்டது வாஜ்பாய் அஸ்தி - 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி அனைத்து மாநில பா.ஜ.க தலைவர்களிடமும் வழங்கப்பட்டது. தமிழகம் சார்பாக தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுக்கொண்டார். 

வாஜ்பாய் அஸ்தி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக சிறுநீரகக் கோளாரால் பாதிக்கப்பட்டுக் கடந்த 16-ம் தேதி மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் ஆகஸ்ட் 17-ம் தேதி தகனம் செய்யப்பட்டது. முதலாவதாக வாஜ்பாய் அஸ்தியின் ஒரு பகுதி, ஹரித்துவாரிலுள்ள கங்கை நதியில் கரைக்கப்பட்டது. அஸ்தியின் மற்றொரு பாதியை அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பா.ஜ.க தலைவர்களிடம் அஸ்தியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாஜ்பாயின் அஸ்தியை மாநிலத் தலைவர்களிடம் ஒப்படைத்தனர். தமிழகம் சார்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுக்கொண்டார். 

வாஜ்பாய் அஸ்தி

வாஜ்பாயின் அஸ்தியை விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை கொண்டுவருகிறார் தமிழிசை சௌந்தரராஜன். விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அஸ்தி பா.ஜ.க தலைமை அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறது. அதன் பின் வரும் 26-ம் தேதி தமிழகத்தின் மதுரை, திருச்சி, சென்னை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஈரோடு ஆகிய ஆறு இடங்களில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு முக்கிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் சென்னையிலும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கன்னியாகுமரியிலும் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தலைமையில் திருச்சியிலும் பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா தலைமையில் ராமேஸ்வரத்திலும் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஈரோட்டிலும் முன்னாள் மாநிலத் தலைவர் கே.என் லட்சுமணன் தலைமையில் மதுரையிலும் ஒரே நேரத்தில் கரைக்கப்பட உள்ளது.


[X] Close

[X] Close