வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (22/08/2018)

கடைசி தொடர்பு:14:40 (22/08/2018)

`சபரிமலைக்குப் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம்' - கேரள உயர் நீதிமன்றம்  

கொட்டித் தீர்த்த பருவமழையால், தண்ணீரிலும் கண்ணீரிலும் தத்தளித்து வருகின்றனர் கேரள மக்கள். இந்நிலையில், திருவோண பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் எனக் கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

சபரிமலை

கேரளாவில் பெய்த கனமழையால் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிவிட்டது. தற்போது, மழையின் அளவு குறைந்துள்ளதால், மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையில், பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சபரிமலை கோயிலுக்குச் செல்லும் சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால், பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என கேரள உயர் நீதிமன்றம் தேவஸ்தான போர்டுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

கேரள உயர் நீதிமன்றத்தில் சபரிமலா சிறப்பு ஆணையம் சார்பில் அண்மையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சபரிமலைக்குச் செல்லும் வழிகள் அனைத்தும் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளன. தொலைத் தொடர்பு சேவை, மின்சார வசதி என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், பக்தர்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள் எனக் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் எனக் கேரள உயர் நீதிமன்றம் தேவஸ்தான போர்டுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

முன்னதாக, ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவோண பூஜை சபரிமலையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்த நாள்களில் ஐயப்பனைத் தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கூடுவார்கள். இந்நிலையில், பக்தர்களின் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.