கடினமான நேரத்தில் கைவிட்ட தொழில்நுட்பம்! - சத்தமில்லாமல் சாதித்த ஹாம் ரேடியோ

கேரளாவின் கடினமான நேரங்களில் வெள்ளத்தில் சிக்கிய பலரை கண்டுபிடிக்க உதவியுள்ளது தன்னார்வலர்களின் ஹாம் ரேடியோ. 

கேரளா வெள்ளம்

உலகில் என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் சில இக்கட்டான நேரங்களில் பழைய பொருள்களே நமக்கு அதிகம் உதவுகிறது. அதே போல் செல்போன்கள் மூலம் கையில் உலகத்தை அடக்க முடியும் எனச் சொல்பவர்கள் உண்டு. ஆனால், கேரள வெள்ளத்தில் சிக்னல் இல்லாமலும் சார்ஜ் இல்லாமலும் பயனற்றப் பொருளாகத்தான் செல்போன் இருந்துள்ளது. இவ்வளவு மழையிலும் ஹாம் ரேடியோ பலரின் நிலையை அறிந்துகொள்ள உதவியுள்ளது. கேரளாவை ஸ்தம்பிக்க வைத்த வெள்ளத்தில் பலர் தங்களின் பகுதிகளுக்கு மீட்புப் படையினர் வரமுடியாமலும் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்க முடியாமலும் மிகவும் கஷ்டப்பட்டனர். அப்படி கஷ்டப்பட்ட மக்களுக்கு சுமார் 100 பேர் கொண்ட ஹாம் ரேடியோ உபயோகிக்கும் தன்னார்வலர்கள் தான் உதவியுள்ளனர். 

ஹாம் ரேடியோ

PhotoCredits : Twitter/@lowcosthamradio

இது குறித்து ஹாம் ரேடியோ நெட்வொர்க்கின் இயக்குநர் சுப்ரமணியன் கூறும்போது, `` நாங்கள் 100 பேர் கொண்ட குழுவாகச் செயல்பட்டோம். ஒரு சிஃப்டுக்கு 30 பேர் என்ற முறையில் இரவு பகலாக வேலை செய்தோம். எங்களுக்குச் சில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மீனவர்களுடன் தொடர்பு இருந்தது. யாரையாவது காணவில்லை அல்லது சிலருக்கு அவசர உதவி தேவை எனச் செய்தி வந்தால் செய்தி வந்த பகுதியை ட்ராக் செய்து உடனடியாக மீட்புக்குழுவினருக்குத் தகவல் தெரிவித்தோம். நாங்கள் தெரிவித்த தகவலில் 800-க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் பற்றி அறிய அவர் பயன்படுத்திய செல்போனின் கடைசி டயலை ஆராய்ந்து அதன் மூலம் அவர் எங்கு இருக்கிறார் எனக் கண்டறிந்தோம். கேரளா மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும் ஹாம் ரேடியோ வைத்திருப்பவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருந்தோம். இங்கு இருக்கும் நிலையைத் தொடர்ந்து பதிவு செய்தோம். எங்களுக்குத் தேவையான மற்ற உதவிகளை அவர்களின் மூலம் பெற்றுக்கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார். 

ஹாம் ரேடியோக்களை அரசின் அனுமதியுடன் யார் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். யாரேனும் இதேபோன்று ஹாம் ரேடியோ வைத்திருந்தால் அவர்களுடன் பேச முடியும். இதைப் பயன்படுத்த செல்போன் கோபுரங்கள் தேவையில்லை; குறைந்த மின்சாரம் இருந்தால் போதும். எவ்வளவு மழை வெள்ளம் இருந்தாலும் கவலையில்லை. நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருந்து உலகின் எந்த மூலைக்கும் தொடர்புகொள்ளலாம். உலகின் பல பேரிடர் காலங்களில் இந்த ஹாம் ரேடியோக்கள்தான் தகவல் தொடர்புக்கு அதிகம் பயன்படுகின்றன. 2016 சென்னை வெள்ளத்தின்போதும் இந்த ஹாம் ரேடியோக்களே அதிகம் உதவின என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!