``நிலைமையை விளக்கும் அந்தக் கண்கள்" - குட்டி நாயை மீட்டு உணவளித்த தமிழர்...!

கேரளாவில் உணவின்றி அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த நாய்க் குட்டியை மீட்டு, அதற்கு உணவு கொடுத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பாலா.

கேரள மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் உதவிகளில் பல்வேறு நெகிழ்ச்சி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த வெள்ளத்தில் மனிதர்களைவிட ஆடு, மாடு, நாய் போன்ற விலங்கினங்களின் உயிர்கள்தாம் அதிகம் பறிபோயுள்ளன. பல இடங்களில் தற்போதும், உணவின்றி அந்த விலங்குகள் தவித்து வருகின்றன. இந்நிலையில், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி அருகே ஒரு கிராமத்தில், உணவின்றி அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த, ஒரு குட்டி நாயை மீட்டு, அதற்கு உணவு கொடுத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சினிமா உதவி இயக்குநர் பாலா.

இதுகுறித்து பாலா, ``இரண்டு வாரங்களுக்கு மேலாக இங்குதான் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். சாலக்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றபோதுதான், அந்தக் குட்டி நாயைப் பார்த்தோம். அதைப் பார்த்தபோதே, அது உணவு சாப்பிட்டு பல நாள்கள் ஆகியிருப்பது தெரிந்தது. இதையடுத்து, புட்டியில் வைத்து பால் கொடுத்தோம்.

வெள்ளம் அதிகமாக இருந்தபோது, பள்ளத்தில் இருந்த இந்தக் குட்டி நாயை, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மேட்டுப் பகுதியில் சேர்த்துள்ளார். ஆனால், அங்கிருந்து அதற்கு எங்கே செல்வது என்று தெரியாமல் அப்படியே கண்ணீர்விட்டபடி அதிர்ச்சியில் இருந்துள்ளது. தற்போது, அந்தக் குட்டி நாய் நலமாக உள்ளது” என்றார்.

கண்ணீர் வடிக்கும் அந்தக் குட்டி நாயின் கண்களில் தெரியும் நன்றி கலந்த அதிர்ச்சி நிலைமையைத் தெளிவாகச் சொல்லிவிடும். அதற்கு உணவு கொடுப்பதைவிட அறமான செயல் வேறு எதுவுமில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!