`முகாமிலிருந்து எங்கே போறதுன்னே தெரியல!’ - தவிக்கும் கேரள மக்கள் #Spotvisit | Kerala Floods: People in relief camps, focus on rehabilitation

வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (22/08/2018)

கடைசி தொடர்பு:16:18 (22/08/2018)

`முகாமிலிருந்து எங்கே போறதுன்னே தெரியல!’ - தவிக்கும் கேரள மக்கள் #Spotvisit

கேரளாவில் உள்ள மக்கள் வெள்ளப் பாதிப்பிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்ப, நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான உதவிகளும் நிவாரணப் பொருள்களும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுவருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் கேரளா இடுக்கி பகுதியில் உள்ள மக்கள் கூறும் உண்மை நிலவரங்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன!

இடுக்கி ஆட்சியர் அலுவலகத்திலும், நிவாரண முகாம்களிலும் ஆயிரக்கணக்கான நிவாரணப் பொருள்கள் வந்தடைந்துள்ள நிலையில், இங்குள்ள சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து, மிக மோசமாக சேதமடைந்துள்ளதால், நிவாரணப் பொருள்களை மக்களிடம் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக முகாம்களில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரிய பெரிய லாரிகளில் பொருள்கள் ஏற்றி வரப்பட்டு, ஒரே இடத்தில் முடங்கிவிடுவதால், போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல். முடிந்தவரை பாதிக்கப்பட்ட மக்களிடம் பொருள்கள் சேர்ந்தால் பேருதவியாக இருக்கும் எனக் கேரள மக்கள் கோரிக்கை.

இடுக்கி மாவட்டத்தில் எறட்டயார் பகுதியிலுள்ள முகாம் ஒன்றில் உள்ள மக்களிடம் பேசுகையில், "மழை ஆரம்பிச்சதுல இருந்து நாங்க இந்த முகாம்லதான் இருக்கோம். எங்க வீடு முழுக்க சிதைஞ்சுபோயிடுச்சு. சாலைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டதால, அத்தியாவசியப் பொருள்கள் எங்களுக்குக் கிடைக்குறதுலயும் சிரமம் ஏற்படுது. முகாம் முடிஞ்சப்பறம் நாங்க எங்க போவோம்ன்னே தெரியல" என்று கைகூப்பி அழுதது உண்மையிலேயே மனதுக்குப் பாரமாய் அழுத்தியது.