வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (22/08/2018)

கடைசி தொடர்பு:17:00 (22/08/2018)

`8,000 பட்டதாரிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை!' - கோவா தேர்வாணையத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்

அரசுப் பணிக்காகத் தேர்வெழுதிய 8,000 பட்டதாரிகளில் ஒருவர்கூட தேர்ச்சிபெறவில்லை என கோவா தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

அரசுப்பணி

கோவா அரசாங்கம் சார்பில், கடந்த ஜனவரி மாதம் கணக்காளர் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. 80 காலிப் பணியிடங்களுக்கு 8,000-ம் பேர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகளை கணக்கியல் துறை இயக்குனரகம் நேற்று வெளியிட்டது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், தேர்வு எழுதிய ஒருவர்கூட தேர்ச்சிபெறவில்லை என்பதுதான். 

100 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், தேர்ச்சி பெற குறைந்தது 50 மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும். 5 மணி நேரம் நடைபெற்ற தேர்வில், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணக்கியல் தொடர்பான கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்ற தேர்வர்கள், நேர்முகத் தேர்வுக்குத் தகுதிபெற்று இறுதி நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால், இந்தத் தேர்வை எதிர்கொண்ட பட்டதாரி இளைஞர்களில் ஒருவர்கூட தேர்ச்சிபெறவில்லை. 

இதுகுறித்து அம்மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொதுச் செயலாளர் பிரதீப் பட்கோங்கர், `8,000 தேர்வர்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. கோவா பல்கலைக்கழகமும், கணக்கியல் கல்லூரிகளும் இப்படியான பட்டதாரி இளைஞர்களை உருவாக்குகின்றனவா' என்று ஆதங்கப்பட்டுள்ளார்.