வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (22/08/2018)

கடைசி தொடர்பு:18:25 (22/08/2018)

`நான் பதிவிடவில்லை; அட்மின் செய்த வேலை அது!’ - விமர்சனங்களுக்கு அமைச்சரின் பதில்

கேரளாவில், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. இதனிடையே, நிவாரண முகாமில் உறங்கிய பா.ஜ.க அமைச்சரை ட்ரோல் செய்து கலங்கடித்துவருகிறார்கள் நெட்டிசன்கள். 

 பா.ஜ.க அமைச்சர்

Photo Credit -facebook@Alphons Kannanthanam

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் புகுந்த வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ளது. இதனால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அண்டை மாநிலங்களிலிருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனுடன், உலக நாடுகளும் கைகோத்துள்ளன. இதனிடையே, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சரான அல்போன்ஸ் கண்ணந்தனம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் செங்கணாசேரி முகாமில் படுத்துறங்கும் புகைப்படத்தை நேற்று வெளியிட்டார். வெளியிட்ட சில மணி நேரத்திலேயே 6,000 ஷேர்கள், 10,000 கமென்ட்டுகள் என அந்த போஸ்ட் வைரலானது.

ஆனால், அமைச்சரின் புகைப்படத்தில் கமென்ட் பதிவிட்டிருந்த நெட்டிசன்கள், பெரும்பாலும் எதிர்மறை கருத்துகளைக் கூறியே கடுமையாக அவரை விமர்சித்துவருகின்றனர்.`எவ்வளவு அழகான புகைப்படம்; எந்த மொபைல் போனில் எடுத்தீர்கள்...எனக்கும் இதேபோல ஒரு மொபைல்போன் வேணும்'. `நீங்கள் நிச்சயம் பிரதமர் மோடியின் சீடர்தான். உறங்கும்போதுகூட போட்டோவுக்கு எப்படி போஸ் கொடுக்கிறார் என்பதைப் பாருங்கள்’. `தூக்கத்தில் நடப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தூக்கத்தில் ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்வதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறோம்’ போன்ற பதிவுகளால் அமைச்சரைக் கலங்கடித்துள்ளனர் நெட்டிசன்கள். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர், `ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான புகைப்படங்களை நான் பதிவிடவில்லை. எனது ஃபேஸ்புக்கை நிர்வகிக்கும் நபர் பதிவிட்டுள்ளார்' என்றார்.