சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரை! - ஆசிரியரைத் தெருவில் இழுத்துச்சென்ற மக்கள்

ஆந்திராவில், பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, தெருவில் இழுத்துச் சென்றுள்ளனர்.

ஆசிரியர்
 

ஆந்திரா மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள ஏலூ நகரத்தில், நேற்றிரவு 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை சிலர் தெருவில் வைத்து அடித்து, இழுத்துச்சென்றனர். அந்த நபரின் ஆடைகளைக் கழற்றி, கைகளைக் கட்டி, சாலையில் இழுத்துச்செல்லும் காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  `அந்த நபரை ஏன் இப்படி அடித்து இழுத்துச்செல்கிறீர்கள்...’ என்று சாலையில் சென்றவர்கள் கேட்டனர்.  அதற்கு, அவர்களில் ஒருவர் அளித்த பதில் பின்வருமாறு.  
 

`இவர் பெயர் ராம் பாபு. இவர், எங்கள் உறவினர் வீட்டு சிறுமி படிக்கும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தச் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைசெய்துள்ளார். இதனால், அந்தச் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். பயந்துபோன சிறுமி, இந்த விவகாரத்தை வீட்டில் சொல்லாமல் பள்ளியில் அழுதபடி இருந்துள்ளார். இதைக் கவனித்த ஆசிரியர், சிறுமியை மிரட்டி  சிறுமியிடம் சில கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்து சாப்பிடச் சொல்லியிருக்கிறார். சிறுமியும் வீட்டுக்குச் சென்றதும் மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதையடுத்து, சிறுமி அதிகப்படியான உதிரப்போக்கால் வீட்டிலேயே மயங்கி விழுந்திருக்கிறார். பின்னர்தான் வீட்டில் இருந்த அனைவருக்கும் சிறுமிக்கு நடந்தவை தெரியவந்துள்ளது.  ஆத்திரமடைந்த குடும்பத்தினர், அந்த ஆசிரியர் வீட்டுக்கே சென்று தர்ம அடி கொடுத்து, காவல் நிலையம் வரை இழுத்துச்செல்கின்றனர்’ என்றார். 

ஆசிரியர்
 

காவல் நிலையத்தில் ராம் பாபு சிறுமியை வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினர் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு என்று போலீஸார் அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். 

Picture Courtesy - NDTV

Do you like the story?

Please Appreciate the Author by clapping!