வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (22/08/2018)

கடைசி தொடர்பு:21:20 (22/08/2018)

`முழங்கால் அளவு தண்ணீர்; புதுவிதமான சர்வீஸ்!' - வெள்ளத்திலும் பிஸியான கேரள தேநீர் கடை #ViralVideo

கேரளாவை புரட்டிப்போட்டுள்ள மழை தற்போது தணிந்துள்ளது. வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் அம்மாநில அரசுடன் இணைந்து அண்டை மாநிலங்களும் கைகோத்துவருகின்றன. 

கேரளா

கேரளாவில், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய பருவமழை தீவிரம் அடைந்ததால், 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சேதத்தை கேரள மக்கள் சந்தித்துள்ளனர். தற்போது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சற்று வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. மீட்புப் பணிகளை முடிக்கிவிட்டுள்ள மாநில அரசு, மக்களை இயல்புநிலைக்குக் கொண்டுவர தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறது. இதனிடையே, சமூக ஊடகங்களில் கேரளா வெள்ளம் தொடர்பான பல சுவாரஸ்யமான கதைகள், வீடியோக்கள், புகைப்படக் காட்சிகள் எனப் பகிரப்பட்டுவருகின்றன. அந்த வகையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், வெள்ளத்தின் நடுவில் சுறுசுறுப்பாக தேநீர்க் கடை நடத்தி வரும் வீடியோ ட்ரெண்டாகி வலம்வருகிறது. 

அந்த வீடியோ காட்சியில், முழங்கால் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இருந்தபோதிலும் சுடச் சுட தேநீரை கோப்பையில் ஊற்றி ஆற்றி, தன் கடைக்கு வந்துள்ள வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார். இதில், சுவாரஸ்யமான காட்சி என்னவென்றால், எங்கும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் நடப்பது மிகவும் சிரமம். அதனால் அந்த நபர், ஒரு ப்ளாஸ்டிக்  ட்ரேயில் தேநீர் கப்புகளை வைத்து, தண்ணீரில் தள்ளி விடுகிறார். அது, மிதந்தபடி வாடிக்கையாளர்களிடம் செல்கிறது. சுடச்சுட தேநீரை வாடிக்கையாளர்கள் சுவைக்கின்றனர். இந்த வீடியோ பதிவு வெள்ளப்பாதிப்பில் இருந்து மீண்டுவரும் கேரள மக்களின் நிலையை அழகாகத் தெளிவுபடுத்துகிறது.

Viedo Credit - facebook@Munees PK