`வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியை ஏற்கலாம்!' - கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் | Can accept money from foreign, says Pinarayi Vijayan

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (22/08/2018)

கடைசி தொடர்பு:20:40 (22/08/2018)

`வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியை ஏற்கலாம்!' - கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்

'நல்லெண்ண அடிப்படையில் வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவியை ஏற்கலாம்' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

பினராயி விஜயன்

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, பல்வேறு அமைப்பினரும் நிதி உதவி அளித்துவருகின்றனர். தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் கோடிக்கணக்கான ரூபாயை நிவாரண உதவியாக அறிவித்துவருகின்றன. இந்த நிலையில், கேரளாவுக்கு நிவாரண நிதியாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் தருவதாகத் தெரிவித்துள்ளதாக பினராயி விஜயன் அறிவித்தார்.

இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியை மத்திய அரசு வாங்கிக்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. மத்திய அரசு மறுத்துவிடும் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், 'கேரளாவில் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஆகஸ்ட் 26ல் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்படும். மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால், மத்திய அரசு ஏற்க வேண்டும். வெளிநாட்டு நிதியை ஏற்கலாம் என்று 2016-ம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மைக் கொள்கையில் உள்ளது' என்று தெரிவித்தார்.