கேரளாவுக்கு ரூ.77 கோடி நிதி வழங்கினாரா ரொனால்டோ?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, நிவாரண உதவிகள் பல தரப்பிலும் இருந்து வந்துகொண்டிருக்கிறது. அதேவேளை, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. 

கேரளா வெள்ளம் -ரொனால்டோ

வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால், தண்ணீரில் தத்தளித்துவரும் கேரள மக்களை துயரத்திலிருந்து மீட்டெடுக்கும் முயற்சிகளில் மாநில அரசு தீவிரம்காட்டிவருகிறது. நிலச்சரிவு, வெள்ளம் போன்றவற்றால், சாலைகள், கட்டடங்கள், வீடுகள், மரங்கள் என அனைத்தும் பலத்த சேதம் அடைந்துள்ளன. இயற்கைப் பேரிடரால், துவண்டுபோயுள்ள மக்களுக்கு நிதி உதவிகள், நிவாரணப் பொருள்கள் என உதவிகள் நீண்டுவருகின்றன. ஆனால், சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் அதிக அளவில் பகிரப்பட்டு  வருகிறது. இதனால், இந்திய ராணுவம் சார்பில் சமீபத்தில் எச்சரிக்கை விடப்பட்டது. 

ரொனால்டோ

முன்னதாக, முல்லைப் பெரியாறு அணைகுறித்து வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவின. இதையடுத்து, செய்தியின் உண்மைத்தன்மை அறியாமல், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், கேரளா தொடர்பாக வெளிவரும் பொய்யான செய்திகள் குறித்து அனைத்து மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, `வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக ரூ.77 கோடி அளித்துள்ளார்' என்ற செய்தி வேகமாகப் பரவத்தொடங்கியது. இந்தச் செய்தி உண்மையில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எது எப்படியோ, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களை இவ்வாறான போலியான செய்திகளைப் பகிர்ந்து, அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தாமல் இருந்தால் சரி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!